தமிழகம்

கோவை விமான நிலையத்தில் 4.68 லட்சம் வெளிநாட்டு சிகரெட்கள் பறிமுதல்: வரி, அபராதம் ரூ.1 கோடி

செய்திப்பிரிவு

இறக்குமதி வரி செலுத்தாமல் கடத்தி வரப்பட்ட 4.68 லட்சம் வெளிநாட்டு சிகரெட்களை கோவை விமான நிலையத்தில் சுங்கவரித் துறையினர் பறிமுதல் செய்தனர். வரி, அபராதம் ரூ.1.1 கோடி விதிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இருந்து வந்த சில்க் ஏர் விமானம் நேற்று முன்தினம் இரவு கோவை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. பயணிகளின் உடைமைகளை சோதனையிட்டபோது சென்னை, மதுரை, கேரளாவைச் சேர்ந்த 7 பயணிகளின் உடைமைகளில் வெளிநாட்டு சிகரெட்கள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக வைத்திருந்தது தெரியவந்தது.

விமான நிலைய புலனாய்வுத் துறையினர் அளித்த தகவலின்பேரில் சுங்கவரித் துறை அதிகாரிகள், 7 பயணிகளின் உடைமைகளை சோதனையிட்டனர். அதில், 2,340 சிகரெட் பெட்டிகளும், அதில் 4.68 லட்சம் எண்ணிக்கையிலான வெளிநாட்டு சிகரெட்களும் இருந்தன. இறக்குமதி வரி செலுத்தாமல் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான சிகரெட்கள் இந்தியாவுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதால், சுங்கவரித் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகாரிகள் கூறும்போது, ‘‘வெளிநாட்டு சிகரெட்களை இந்தியாவில் நல்ல லாபத்துக்கு விற்கும் நோக்கில் அவற்றை கடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் சிகரெட்களுக்கு 145 சதவீதம் அளவுக்கு இறக்குமதி வரி விதிக்க வாய்ப்புகள் உள்ளன. அதன் அடிப்படையில், மொத்தமாக பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட் பெட்டிகளுக்கு ரூ.56 லட்சம் சுங்கவரியும், அதே அளவு தொகை அபராதமாகவும் விதிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை வரி, அபராதம் கட்டத் தவறினால் சிகரெட் பொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும். இந்த சிகரெட் பெட்டிகளில், இந்தியாவில் விற்பனை செய்யத் தேவையான எச்சரிக்கைப் படங்கள் இல்லை. மற்றபடி, 200 வெளிநாட்டு சிகரெட்கள் வரை பயணிகள் சுங்க வரி செலுத்தாமல் இந்தியாவுக்கு எடுத்து வரமுடியும்’’ என்றனர்.

SCROLL FOR NEXT