சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களை உள்ளடக்கிய சென்னை மண்டலத்தில் 99.62 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 10-ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 9-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 10-ம் தேதி முடிந்தன. நாடு முழுவதும் நடந்த இத்தேர்வை 8 லட்சத்து 80 ஆயிரம் மாணவர்கள் பொதுத்தேர்வாகவும், 7 லட்சத்து 81 ஆயிரம் பேர் பள்ளி அளவிலான தேர்வாகவும் எழுதினர்.
இந்நிலையில், தேர்வு முடிவுகள் நேற்று மதியம் 1 மணிக்கு இணையதளங்களில் (www.results.nic.in, www.cbseresults.nic.in, www.cbse.nic.in) வெளியிடப்பட்டன. முதலில் சென்னை, திருவனந்தபுரம், டெல்லி, டேராடூன், அலகாபாத் ஆகிய மண்டலங்களின் தேர்வு முடிவுகளும், அதைத் தொடர்ந்து பிற்பகல் 2 மணி அளவில் மற்ற மண்டலங்களின் தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டன.
தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ் டிரா, கோவா, அந்தமான் நிக்கோ பார், டாமன்-டையூ ஆகிய மாநிலங் கள், யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய சென்னை மண்டலத் தில் 1 லட்சத்து 78 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வில் கலந்துகொண்டனர். இதில் 99.62 சத வீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வைப் பொறுத்தவரை, பிளஸ்2 போல மதிப்பெண் வெளியிடப்படுவதில்லை. சான்றிதழில் கிரேடு மட்டுமே குறிப்பிடப்படும். அவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் ஏ-1, ஏ-2, ஏ, பி-1, பி-2, பி என கிரேடு அளிக்கப்படும். ஒவ்வொரு கிரேடுக்கும் குறிப்பிட்ட புள்ளிகள் (பாயின்ட்) அளிக்கப்படும். ஒட்டு மொத்த புள்ளிகள் அடிப்படையில் மாணவரின் சராசரி புள்ளி குறிப்பிடப்பட்டிருக்கும்.
இனி பொதுத்தேர்வு மட்டுமே
சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வை பொதுத்தேர்வாகவும், மாணவர்கள் விரும்பினால் பள்ளி அளவிலான தேர்வாகவும் எழுதும் விருப்பமுறை இந்த ஆண்டுடன் நிறைவு பெறுகிறது. வரும் கல்வி ஆண்டு (2017-18) முதல் 10-ம் தேர்வை பொதுத்தேர்வாக மட்டுமே எழுதமுடியும். பள்ளி அளவிலான தேர்வாக எழுதக்கூடிய வாய்ப்பு இருப்பதால், மாணவர்கள் ஒழுங்காக படிப்பதில்லை. இதனால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படும் என்று ஆசிரியர்கள், பெற்றோர் கருத்து தெரிவித்ததால் பழைய நடைமுறையே மீண்டும் அறிமுகப்படுத்தப்படுவதாக சிபிஎஸ்இ அதிகாரிகள் தெரிவித்தனர்.
3 மணி நேரம் காத்திருப்பு
சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவு 3-ம் தேதி (நேற்று) முற்பகல் வெளியிடப்படும் என்று 2-ம் தேதி இரவு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுபோல இதுவும் காலை 10 மணிக்கு வெளியாகும் என்று அனைவரும் இணையதளங்களைப் பார்த்தபடி இருந்தனர். சிபிஎஸ்இ இணையதளத்தில் ‘விரைவில் தேர்வு முடிவு வெளியாகும்’ என்ற அறிவிப்பு ஓடியதே தவிர, எப்போது என்று தெரிவிக்கப்படவில்லை. 3 மணி நேர காத்திருப்புக்குப் பிறகு, பகல் 1 மணிக்கு தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் எந்த நாளில் எத்தனை மணிக்கு வெளியிடப்படும் என்று அரசு தேர்வுத்துறை பல நாட்களுக்கு முன்பே அதிகாரபூர்வமாக வெளியிட்ட நிலையில், மத்திய அரசின் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) கடைசி நேரத்தில் அறிவித்து, முடிவு வெளியிடுவதிலும் தாமதம் செய்தது மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.