தமிழகம்

அஞ்சல் துறை ஊழியருக்கு ஆயுள் தண்டனை: பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு

செய்திப்பிரிவு

முன் விரோதம் காரணமாக, ஓய்வுப்பெற்ற ரயில்வே ஊழியரை கொலை செய்த அஞ்சல் துறை ஊழியருக்கு ஆயுள் தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, பூந்தமல்லி, கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்தவர் ராகவன்(65). விருப்ப ஓய்வுப்பெற்ற ரயில்வே ஊழியர். இவரது வீட்டருகே வசித்தவர் பென்சிலய்யா(48), அஞ்சல் துறை ஊழியர்.

இருவருக்கும் நிலம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்தது. இந்நிலையில், கடந்த 2009-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி மாலை, பென்சிலய்யாவின் தங்கை மகன், ராகவன் வீட்டருகே சிறுநீர் கழித்தார். இதனை ராகவன் மனைவி சாயம்மாள் கண்டித்ததன் காரணமாக பென்சிலய்யா, ராகவனையும் அவரது மனைவி சாயம்மாளையும் மரக்கட்டையால் தாக்கினார். இதில் ராகவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து, பட்டாபிராம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். அந்த வழக்கு விசாரணை, பூந்தமல்லியில் உள்ள, கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம்- 3ல் நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணையில் அரசு தரப்பில், அரசு வழக்கறிஞர் அந்தமான் முருகன் வாதிட்டார். விசாரணையில் பென்சிலய்யாவின் குற்றம் நிரூபிக்கப்பட்டது.

இதையடுத்து, பூந்தமல்லியில் உள்ள கூடுதல் அமர்வு நீதிமன்றம்-3 -ன் நீதிபதி மகாலட்சுமி நேற்று அளித்த தீர்ப்பில், “ராகவனை கொலை செய்த குற்றத்துக்காக பென்சிலய்யாவுக்கு, ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. அபராதத் தொகையை செலுத்த தவறினால், மேலும் ஆறு மாதங்கள் கடுங்காவல் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்” என தன் தீர்ப்பில் நீதிபதி மகாலட்சுமி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT