பஸ் நிறுத்தத்தில் நின்றவரிடம் ரூ.80 லட்சம் பணம் வழிப்பறி செய்யப் பட்டதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுவை மாநிலம் வாஞ்சிநாதன் தெருவில் வசிப்பவர் செழியன் (40). வெளிநாட்டு கரன்சிகளை இந்திய பணமாக மாற்றித் தரும் ஏஜென்சி வைத்துள்ளார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த சண்முகம் (37) என்பவர் வேலை செய்துவந்தார். புதுவையில் பெறப்படும் வெளிநாட்டு கரன்சிகளை சென்னை பிராட்வேயில் உள்ள வெளிநாட்டு கரன்சிகளை மாற்றும் அலுவலகத்துக்கு கொண்டு வந்து, இந்திய பணமாக மாற்றிச் செல்வது சண்முகத்தின் வழக்கம். 15 நாட்களுக்கு ஒருமுறை இப்படி அவர் சென்னை வந்து பணத்தை மாற்றிக் கொண்டு சென்றுள்ளார்.
ஐரோப்பிய யூரோ கரன்சியை இந்திய பணமாக மாற்ற, நேற்று முன்தினம் சண்முகம் சென்னைக்கு வந்துள்ளார். சென்னை பிராட்வேயில் வழக்கமாக செல்லும் அலுவலகத்தில் யூரோவை மாற்றி இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.80 லட்சத்தை பெற்றார். அதை ஒரு பையில் வைத்துக்கொண்டு, மாநகர பஸ் மூலம் நேற்று முன்தினம் இரவு திருவான்மியூர் வந்துள்ளார். பின்னர் அங்கிருந்து புதுச்சேரி செல்ல பஸ்ஸுக்காக திருவான்மியூரில் நின்றுள்ளார்.
அப்போது 2 மோட்டார் சைக்கிள் களில் வந்த 4 பேர், சண்முகத்தின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி, அவர் வைத்திருந்த ரூ.80 லட்சம் பணத்தை பறித்தனர். அப்போது அவர்கள் அருகே வந்த மற்றொரு காரில் பணத்தை பறித்தவர் ஏறி தப்பிச் சென்றுவிட்டார். மற்றவர்கள் மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றுவிட்டனர்.
இது குறித்த தகவலின்பேரில் திருவான்மியூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அடையாறு துணை ஆணையர் அபினவ்குமார், திருவான்மியூர் உதவி ஆணையர் அழகு, திருவான்மியூர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ராஜன் உட்பட பலர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
பணம் எடுத்து வருவது புதுவை எம்எல்ஏ ஒருவரின் அண்ணன் மகனுக்கு தெரியும் என்றும், அவரது ஆட்கள் பணத்தைக் கொள்ளையடித்திருக்க வாய்ப்பு இருப்பதாகவும் போலீஸில் சண்முகம் தெரிவித்துள்ளார். இந்த பணத்தை சண்முகத்திடம் கொடுத்து அனுப்பிய புதுவை ஏஜென்சி உரிமையாளர் செழியன் இதுவரை போலீஸாரின் விசாரணைக்கு வரவில்லை. எனவே சண்முகமே ஆட்களை தயார் செய்து அப்பணத்தை கொள்ளையடித்திருக்கலாம் அல்லது செழியன் தகவலின்பேரில் வேறு யாராவது இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகங்கள் போலீஸாருக்கு வந்துள்ளன.