வாகனங்களுக்கான ஆர்.சி புத்தகம் உள்ளிட்ட ஆவணங்கள் அடங்கிய ஸ்மார்ட் கார்டு தற்போது 2 ஆர்டிஓ அலுவலகங்களில் மட்டுமே வழங்கப்படுகிறது. மக்கள் பயன்பெறும் வகையில் மற்ற ஆர்டிஓ அலுவலகங்களுக்கும் இந்தத் திட்டத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என வாசகர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக ‘தி இந்து உங்கள் குரல்’ தொலைபேசி எண் ணில் தொடர்புகொண்டு வாசகர் என்.சதானந்தன் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் சென்னை தெற்கு, கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ‘ஸ்மார்ட் கார்டு’ திட்டத்தை கடந்த 2008-ம் ஆண்டு, தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. ஓட்டுநர் உரிமம், ஆர்சி புத்தகம் மற்றும் வாகன உரிமையாளர்களின் இதர முக்கிய தகவல்களும் இடம்பெற்று இருக்கும். இதனால், தனித்தனியாக ஆவணங்களை வாகன உரிமையாளர்கள் வைத் திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்தத் திட்டத்துக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இந்தத் திட்டத்தை அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் விரிவாக்கம் செய்ய போக்குவரத்துத் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக போக்குவரத்து ஆணையரக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘வாகனங்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்குவது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இது தொடர்பாக தற்போது எதுவும் கூற முடியாது’’ என்றார்.