தமிழகம்

ரயிலில் வங்கி பணம் கொள்ளை வழக்கு: சிபிசிஐடி ஐ.ஜி தலைமையில் ஆலோசனை கூட்டம் - வங்கி, ரயில்வே அதிகாரிகள் பங்கேற்பு

செய்திப்பிரிவு

ரயிலில் வங்கி பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு விசாரணை குறித்து சிபிசிஐடி ஐ.ஜி மகேஷ்குமார் அகர்வால் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

சேலத்தில் இருந்து சென்னைக்கு கடந்த 8-ம் தேதி வந்த ரயிலில் தனிப்பெட்டியில் ரூ.323 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் கொண்டுவரப்பட்டன. இதில் ரூ.5.75 கோடி பணத்தை ரயிலின் மேற்கூரையில் துளையிட்டு மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கில் இதுவரை முக்கியமான தடயங்கள் சிக்கவில்லை.

வங்கி அதிகாரிகள், பார்சல் நிறுவன ஊழியர்கள், ரயில்வே ஊழியர்கள் என பலதரப்பு நபர்களிடம் விசாரணை நடத்தியும் சிபிசிஐடி போலீஸாருக்கு எந்த தடயமும் சிக்கவில்லை. அதைத் தொடர்ந்து ரயில் சென்ற வழித்தடத்தில் சிபிசிஐடி போலீஸார் பல்வேறு குழுக்களாக பிரிந்து, நடந்தே சென்று சோதனை செய்தனர். கொள்ளை சம்பவம் சேலத்தில் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் சிபிசிஐடி போலீஸாருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சேலத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியா முழுவதும் இருந்து 14 பிரபல ரயில் கொள்ளையர்களின் பட்டியலை சிபிசிஐடி போலீஸார் தயாரித்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை இந்த வழக்கில் முக்கியமான தடயங்கள் சிக்காத நிலையில் விசாரணையில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை எழும்பூர் சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி ஐ.ஜி. மகேஷ்குமார் அகர்வால் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள், ரயில்வே போலீஸார் , ரிசர்வ் வங்கி அதிகாரிகள், ரயில்வே அதிகாரிகள் மற்றும் சிபிசிஐடி அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். வழக்கு விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT