தமிழகம்

ஊருக்கு நடுவே உருவாகி வரும் குப்பை மலை: பாடியநல்லூரில் பொதுமக்கள் அவதி

இரா.நாகராஜன்

பாடியநல்லூரில், ஊருக்கு நடுவே குப்பை மலை உருவாகி வருவதால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள்.

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது பாடியநல்லூர் ஊராட்சி. சென்னை மாநகராட்சி பகுதிகளுக்கு மிக அருகே உள்ள இந்த ஊராட்சியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த ஊராட்சி பகுதியில் நாள் தோறும் சேரும் குப்பையை, ஊருக்கு நடுவே ஊராட்சி நிர்வாகம் கொட்டுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த குப்பைகளால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதாக அவர்கள் குமுறுகிறார்கள்.

இதுகுறித்து, பாடியநல்லூர் பகுதியைச் சேர்ந்த, குமார் தெரிவித்ததாவது: திருவள்ளூர் நெடுஞ்சாலை, ஜி.என்.டி. சாலை பகுதிகள், மொண்டியம்மன் நகர் உள்ளிட்டவை அடங்கிய பாடியநல்லூர் ஊராட்சியில் 145-க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இந்த தெருக்களில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கடைகளில் நாள்தோறும் சேரும் குப்பைகளை, ஊருக்கு நடுவே உள்ள மொண்டியம்மன் நகர் பகுதியில் ஊராட்சி நிர்வாகம் கடந்த 3 ஆண்டுகளாக கொட்டி வருகிறது. குப்பை கொட்டப்படும் அந்த இடம், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட 5 ஏக்கர் நிலம் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த இடத்தைச் சுற்றி ஆரம்ப சுகாதார நிலையம், 24 மணி நேர அவசர முதலுதவி சிகிச்சை மையம், அரசு மேல்நிலைப் பள்ளி, பஸ் நிலையம், பிரசித்திப் பெற்ற முனிஸ்வரர்-அங்காள ஈஸ்வரி கோயில், புத்தர் கோயில், ரேஷன் கடைகள், நூலகம், உணவுப் பொருள் கிடங்கு, குடிநீர் மேல்நிலை தொட்டி மற்றும் ஆழ்துளை கிணறு, இந்திரா காந்தி தெரு, சுப்ரமணிய பாரதியார் தெரு, முத்துராமலிங்க தேவர் சாலை, பாலகணேசன் நகர் உள்ளிட்டவை அமைந்துள்ளன. இதனால், இப்பகுதிக்கு நாள்தோறும் வந்து செல்லும் நூற்றுக்கணக்கான மக்களுக்கு குப்பையிலிருந்து வெளியேறும் துர்நாற்றத்தால் பாதிக்கப்படுகின்றனர். இந்த குப்பைகளால் நிலத்தடி நீரும் மாசுபட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாடியநல்லூர் நகரச் செயலாளர் நக்கீரன் தெரிவித்ததாவது: ஊராட்சி நிர்வாகம், பொக்லைன் எந்திரம் மூலம், மொண்டியம்மன் நகரில் கொட்டப்பட்டு வரும் குப்பையை, குப்பை மலையாக உருவாக்கி வருகிறது. ஊருக்கு நடுவே உருவாகி வரும் குப்பை மலையால் பாடியநல்லூரில் சுகாதார சீர்க்கேடு ஏற்பட்டுள்ளது.

மொண்டியம்மன் நகரில் உள்ள குப்பையை அகற்றி, மாற்று இடத்தில் கொட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லும் ஊராட்சி நிர்வாகம், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக குப்பை மலையைதான் உருவாக்கி வருகிறது.

இதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், குப்பை கூடையை தலையில் சுமந்து, பொதுமக்களை சந்தித்து, கையெழுத்து வாங்கும் இயக்கம் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறும். தொடர்ந்து, 11-ம் தேதி நடைபயணமாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கவும் உள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து, பாடியநல்லூர் ஊராட்சி நிர்வாக தரப்பில் விசாரித்தபோது, ‘பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, மொண்டியம்மன் நகர் குப்பையை அகற்றி, ஊராட்சிக்கு சொந்தமாக மகாமீர் நகரில் உள்ள ஏழரை ஏக்கர் நிலத்தில் கொட்டும் பணி விரைவில் தொடங்கப்படும்’ என பதில் கிடைத்தது.

SCROLL FOR NEXT