தமிழகம்

‘இரவில் தூக்கமின்றி தவிக்கிறோம்’: கொசு பார்சலுடன் வாசகர் கண்ணீர் கடிதம்

செய்திப்பிரிவு

‘தி இந்து’ தமிழ் நாளேட்டின் அலுவலகத்துக்கு சனிக்கிழமை ஒரு பார்சல் வந்தது. அதிலிருந்த பிளாஸ்டிக் பையில் ஏராளமான கொசுக்கள் இருந்தன. அத்துடன் ஒரு கடிதமும் இணைக்கப்பட்டிருந்தது. சென்னை எம்.ஜி.ஆர். நகர் நேசமணி தெருவைச் சேர்ந்த நடராசன் என்பவர்தான் கொசு பார்சலை அனுப்பியிருந்தார். கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது:

விருகம்பாக்கம், ஜாபர்கான் பேட்டை, சைதாப்பேட்டை வழியாக செல்லும் அடையாறு ஆறு, கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக தூர் வாரப்படவில்லை. காசி தியேட்டர் அருகேயுள்ள மேம்பால பகுதியில் தூண்கள் அமைக்கும் பணி என்று கூறி ஆற்றின் நீரோட்டத்தைத் தடுத்துவிட்டனர். அங்கு நீர் தேங்கி, ஆகாயத் தாமரை செடிகள் வளர்ந்து விட்டன. அதனால் ஏராளமாக கொசு உற்பத்தியாகி இரவில் நாங்கள் தூங்க முடியாத நிலைமை ஏற்பட் டுள்ளது. இரவு ஏன் வருகிறது என்று பயப்படும் அளவுக்கு நிம்மதி இழந்து தவிக்கிறோம். கொசுக்கடி யால் பலவித நோய்களால் தாக்கப் பட்டு மருத்துவத்துக்காக அதிகம் செலவு செய்து வருகிறோம்.

எம்.எல்.ஏ., கவுன்சிலர் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேயர், மாநகராட்சி ஆணையரிடம் தெரிவித்தும் பலனில்லை. ஆற்றில் மண்டிக்கிடக்கும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி, நீரோட்டத்தை சீராக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்தப் பகுதியில், தேர்தல் பிரச்சாரத் துக்காக முதல்வர் ஜெயலலிதா வரும்போது, இதேபோல் லட்சக்கணக்கான கொசுக்களைப் பிடித்து அவரிடம் கொடுப்போம்.

இவ்வாறு கடிதத்தில் நடராசன் கூறியுள்ளார்.

மாநகராட்சி அதிகாரி விளக்கம்

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, ‘‘நீர் தேங்கியுள்ள பகுதிகளில் கொசு மருந்து அடித்துவருகிறோம். ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணி கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது. அப்பணி ஓரிரு நாளில் முடிந்துவிடும். அதன் பிறகு அடையாறு ஆற்றை ஒட்டிய பகுதிகளில் கொசுத் தொல்லை இருக்காது’’ என்றார்.

வாசகர்கள் தங்கள் பகுதியில் உள்ள பிரச்சினைகளை கடிதம் மூலமாகவோ, மின்னஞ்சலிலோ பகிர்ந்து கொள்கிறீர்கள். உங்களின் தகவல் மட்டும் எங்களை வந்தடைந்தால் போதுமானது. அதை லட்சக்கணக்கான வாசகர்களின் கவனத்துக்கு கொண்டு செல்வோம். எம்.ஜி.ஆர். நகர் நடராசனைப்போல, ஆதாரம் என்ற பெயரில் இதுபோன்ற பார்சல்கள் அனுப்புவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

SCROLL FOR NEXT