தமிழகம்

கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கில் இளைஞர் கைது - கைதானவரின் தந்தை புகார்: நீதிபதி விசாரணை

செய்திப்பிரிவு

கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கில் இளைஞர் கைது செய்யப்பட்டார்.

இந்து முன்னணி, கோவை மாநகர் மாவட்ட செய்தித் தொடர் பாளர் சசிகுமார்(36), கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி துடியலூர் அருகே மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக துடியலூர் போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் முன்னேற்றம் இல்லாததால் இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக தேடப்படுவோரின் புகைப்படங்களை வெளியிட்டு சிபிசிஐடி போலீஸார் விசாரித்தனர்.

இந்நிலையில், கோவை கே.கே.நகரைச் சேர்ந்த ஜாபர் அலியின் மகன் சையது அபுதாஹிரிடம்(30) சிபிசிஐடி போலீஸார் பலமுறை விசாரித்துள்ளனர். கடந்த 2 தினங் களுக்கு முன் அபுதாஹிரை சிபிசிஐடி போலீஸார் துப்பாக் கியைக் காட்டி மிரட்டி அழைத்துச் சென்றதாகக் கூறப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் உள்ளிட்டோர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, புகார் தெரிவித்தனர்.

இதற்கிடையே, “கடந்த 20-ம் தேதி இரவு ஹோட்டலில் இருந்து வெளியே வந்த எனது மகனை, சிபிசிஐடி போலீஸார் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி கடத்திச் சென்றனர். அவரை எங்கு வைத்துள்ளார்கள் என்று தெரிவிக்கவில்லை. பல்வேறு காவல் நிலையங்களுக்குச் சென்று தேடிப் பார்த்தும் மகனைக் காணவில்லை. எனவே, சிபிசிஐடி அலுவலகத்தில் சோதனை நடத்தி, அங்கு சையது அபுதாஹிர் இருக்கிறாரா என்பதை உறுதி செய்ய வேண்டும்” என வலி யுறுத்தி, முதன்மைக் குற்றவியல் நீதிமன்றத்தில் அவரது தந்தை ஜாபர் அலி மனு தாக்கல் செய்தார்.

இதுதொடர்பாக சிபிசிஐடி அலுவலகத்தில் சோதனை நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜுடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் எண்.3 நீதிபதிக்கு முதன்மைக் குற்றவியல் நீதிபதி உத்தரவிட்டார்.

இதன்படி, கோவை காவலர் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்கு நேற்று பிற்பகல் சென்ற நீதிபதி வேலுசாமி, அங்கு சோதனை நடத்தினார். அப்போது, சையது அபிதாஹிர் அங்கு இருப்பது தெரியவந்தது. பின்னர் வெளியில் வந்த நீதிபதி, “அபுதாஹிரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு போலீஸுக்கு உத்தரவிட்டுள்ளேன்” என்று கூறினார்.

பின்னர், சிபிசிஐடி அலுவலகத் துக்குள் சென்ற ஜாபர் அலியிடம், தன்னை போலீஸார் சித்ரவதை செய்வதாக அபுதாஹிர் கூறியுள் ளார். ஜாபர் அலியும், வழக்கறி ஞர் நவ்பெல்லும் கூறும்போது, “சசிகுமார் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் சதாம் உசேனுக் கும், சையது அபுதாஹிருக்கும் தொடர்பு உள்ளதாகக் கூறும் போலீஸார், அவரைப் பிடித்து வைத்துக்கொண்டு சித்ரவதை செய்கின்றனர்” என்றனர்.

இதற்கிடையே, சசிகுமார் கொலை வழக்கில் சையது அபுதா ஹிரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ள சிபிசிஐடி போலீஸார், அவரை முதன்மைக் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சதாம் உசேனை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT