தமிழகம்

கும்பகோணம் பள்ளி தீ விபத்து 22-ம் ஆண்டு: 94 குழந்தைகள் குடும்பத்துக்கு அரசு வேலை கோரும் பெற்றோர்

கண்ணீர் மல்க நினைவஞ்சலி

சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளின் 22-ம் ஆண்டு நினைவு தினம் வியாழக்கிழமை (16-ம் தேதி) அனுசரிக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் காசிராமன் தெருவில் அமைந்திருந்த ஸ்ரீ கிருஷ்ணா உதவி பெறும் தொடக்கப் பள்ளியில்,கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தனர்.

மேலும், 18 குழந்தைகள் படுகாயமடைந்தனர். இந்த தீவிபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளின் 22-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையடுத்து, காசிராமன் தெருவில் தீ விபத்து நிகழ்ந்த பள்ளி முன் குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் சார்பில் நினைவஞ்சலி கூட்டமும், பாலக்கரையில் உள்ள நினைவு மண்டபத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலியும் செலுத்தினார்.

தங்களது உயிரிழந்த குழந்தையின் உருவப்படத்தை பார்த்த தாய்மார்கள் அவர்களுக்கு பிடித்த தின்பண்டங்களை வைத்து கதறி அழுதனர்.

தீ விபத்தில் இறந்த 94 குழந்தைகளின் 22-ம் ஆண்டு நினைவு தினத்தை வெளிப்படுத்தும் வகையில் இறந்த குழந்தைகளின் படங்கள் அடங்கிய டிஜிட்டல் பதாதை சம்பவம் நடந்த பள்ளி முன் வைக்கப்பட்டது. இதற்கு பெற்றோர்கள், அரசியல் கட்சியினர்கள், பொதுமக்கள், பள்ளி முன்னாள் மாணவர்கள் உள்ளிட்டோர், மலர் வளையம் வைத்து, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். மாலையில் மகாமககுளத்தில் மோட்ச தீபம் ஏற்றப்பட உள்ளது.

இதில் திமுக தஞ்சை வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான சாக்கோட்டை க.அன்பழகன், திமுக முன்னாள் அமைச்சரும், திருவிடைமருதூர் எம்எல்ஏவுமான கோவி. செழியன், முன்னாள் எம்பி ராமலிங்கம், கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன், மாநகராட்சி துணை மேயர் தமிழழகன், மாநகராட்சி ஆணையர் சுதா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் பாரதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் சின்னை பாண்டியன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் குமரன், மாநகரத் தலைவர் மிர்சாவுதீன், தமிழக வெற்றி கழக மாநகர செயலாளர் முருகானந்தம், மாணவர் அரண் அமைப்பு தமிழ்நாடு தலைவர் சைமன் உள்ளிட்ட அதிகாரிகள், அலுவலர்கள், அதிமுக உள்பட பல்வேறு கட்சியினர் மரியாதை செலுத்தினர்.

தீ விபத்தில் உயிரிழந்த சுஷ்மிதாவின் சகோதரி மதுமிதா கூறியது: 2004 கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் உயிரிழந்த அனைத்து குழந்தைகளின் நினைவாகவும் எனது ஆழ்ந்த அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

22 ஆண்டுகள் ஆகியும் இந்த சம்பவம் ஆறாத வடுவாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 16 அன்று அஞ்சலி செலுத்த வரும்போது பொதுமக்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் இடையூறு ஏற்பட்டுவிடக் கூடாது என்று நீங்கள் நினைக்கும் அந்த அக்கறையும் மிகவும் மதிக்கத்தக்கது.

இந்த நாளில் கும்பகோணம் வட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை வழங்க வேண்டும் என கடந்த 22 ஆண்டுகாலமாக வலியுறுத்தி வரும் எங்களது கோரிக்கை நிச்சயம் தமிழக முதல்வர் கவனத்தில் கொள்ள வேண்டும. தமிழக முதல்வர் அடுத்த ஆண்டு எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவார் என நம்புகிறோம் என்றார் அவர்.

மாணவர் அறன் அமைப்பின் தமிழ்நாடு தலைவர் சைமன் கூறியது: ஜூலை 16-ம் நாளை குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவிக்க வேண்டும். சேதமடைந்துள்ள நினைவு பூங்காவை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்றார் அவர்.

உயிரிழந்த 2 குழந்தைகளின் தந்தை இன்பராஜ், “தவெக தலைவர் விஜய் கரூர் சென்றபோது 41 பேர் உயிரிழந்தனர். அந்த குடும்பங்களுக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்கியுள்ளார். 

இதேபோல் கல்வி கற்கச் சென்ற எங்களது குழந்தைகள் உயிரிழந்தனர். எனவே உயிரிழந்த குழந்தைகள் குடும்பத்திற்கு தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்க வேண்டும்.

இது தொடர்பாக கும்பகோணம் எம்எல்ஏவும், வேளாண்மை துறை அமைச்சருமான வினோத்தை சந்தித்து, அவர் மூலமாக தமிழக முதல்வர் விஜய்யை சந்தித்து எங்களது கோரிக்கை வலியுறுத்த உள்ளோம்,” என்றார்.

SCROLL FOR NEXT