தமிழகம்

500 மீட்டர் நிலப்பிரச்சினை காரணமாக பறக்கும் ரயில் திட்டப்பணி 6 ஆண்டுகளாக தேக்கம்

கி.ஜெயப்பிரகாஷ்

சென்னை வேளச்சேரி - பரங்கி மலை இடையிலான பறக்கும் ரயில் திட்டப் பணிகள் 500 மீட்டர் நிலப்பிரச்சினையால் 6 ஆண்டுளாக கிடப்பில் உள்ளது.

சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பறக்கும் ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டது. சென்னை கடற்கரை முதல் பரங்கிமலை வரை மூன்று கட்டங்களாக இந்தத் திட்டத்தை நிறைவேற்ற சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் 1971-ம் ஆண்டு தீர்மானித்தது. முதல்கட்டமாக சென்னை கடற்கரை - மயிலாப்பூர் இடையே 9 கி.மீ. தூரத்துக்கு பறக்கும் ரயில் திட்டப் பணி 1997-ம் ஆண்டு நிறைவடைந்தது.இரண்டாம் கட்டமாக மயிலாப்பூர் - வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் திட்டப்பணி 2007-ம் ஆண்டு முடிக்கப்பட்டது. இதையடுத்து, வேளச்சேரியையும் - பரங்கிமலையையும் இணைக்கும் பறக்கும் ரயில் திட்டப்பணி கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இந்தப் பணியை நிறை வேற்ற ரூ.495 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2010-ல் இப்பணிகளை முடிக்க காலக் கெடு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், 6 வருட காலமாக இப்பணி முடிவடையாமல் உள்ளது. 500 மீட்டர் தூர நிலத்தை கையகப்படுத்த முடியாததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஜீவன் நகர், தில்லை கங்கா நகர் பகுதியைச் சேர்ந்த 75 குடும்பத்தினர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தற்போது நடைபெற்று வருகிறது.

தெற்கு ரயில்வே அதிகாரிக ளிடம் இதுகுறித்து கேட்டபோது,

‘‘வேளச்சேரி – பரங்கிமலை இடையேயான திட்டப்பணிகளால் தங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள் ளதாக சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதனால் ஏற்பட்டுள்ள தாமதத்தால் திட்டத்துக்காக செலவிடும் தொகை இரு மடங்கு உயர்ந்துள்ளது. இந்த திட்டம் அறிவிக்கப்பட்டபோது, அதன் மதிப்பு ரூ.450 கோடியாக இருந்தது. ஆனால், நிலம் மற்றும் கட்டுமான பொருட்களின் விலை உயர்வு காரணமாக திட்டத்துக்கு ரூ.900 கோடி செலவாகும் நிலை உள்ளது’’ என்றனர்.

இதுபற்றி மெட்ரோ ரயில்வே அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘பறக்கும் ரயில் பரங்கிமலையில் இணைந்தால், மின்சார ரயில்கள், மெட்ரோ ரயில்களில் செல்வோரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும். மக்கள் விரைவாகவும் பயணம் செய்ய முடியும். மேலும், பறக்கும் ரயில்களை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைக்கும் பணியையும் ரயில்வே வாரியம் முடிவு செய்து, அதற்கான பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது’’ என்றார்.

SCROLL FOR NEXT