தமிழகம்

ஆகஸ்ட் 27-ல் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து சென்னையில் ஆர்ப்பாட்டம்: மதிமுக மாணவரணி அறிவிப்பு

செய்திப்பிரிவு

புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து மதிமுக மாணவரணி சார்பில் சென்னையில் வரும் 27-ம் தேதியன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.

மதிமுக இளைஞர் அணி, மாணவர் அணி, தொண்டர் அணி ஆகியவற்றின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சென்னை தாயகத்தில் இன்று நடந்தது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15 அன்று இளைஞரணி, மாணவரணி, தொண்டரணியைச் சேர்ந்த 25 ஆயிரம் பேர் சீருடையுடன் பங்கேற்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி வெற்றிக்கு பாடுபட வேண்டும். உள்ளாட்சிப் பதவிகளுக்கான இட ஒதுக்கீட்டுப் பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும்.

காவிரி, பாலாறு, முல்லைப் பெரியாறு, பாம்பாறு ஆகிய நதி நீர்ப் பிரச்சினைகளில் தமிழகத்துக்கு சிக்கல் ஏற்படும் போதெல்லாம் மத்திய அரசு மவுனம் காப்பது வன்மையாகக் கண்டிக்கத்தகக்து.

மத்திய அரசு கொண்டு வரவுள்ள புதிய கல்விக் கொள்கையைக் கண்டித்து மதிமுக மாணவர் அணி சார்பில் வரும் 27-ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

தமிழக பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்கள் பதவிக்கான காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

கல்விக்கடன் வாங்கிய மாணவர்களை உரிய காலத்துக்கு முன்பே திருப்பி செலுத்த சொல்லி நெருக்கடிக் கொடுக்க கூடாது.

மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாணவர்களின் கல்விக் கடனை ரத்து செய்வோம் என்று வாக்குறுதி அளித்த முதல்வர் ஜெயலலிதா அதை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

SCROLL FOR NEXT