தொலைக்காட்சி விளம்பரங்களில் காட்டியபடி காரில் வசதிகள் இல்லை எனக் கூறி, கோவையைச் சேர்ந்த விமானப்படை அதிகாரி ஒருவர், கார் தயாரிப்பு நிறுவனம் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
கோவை ரெட்பீல்ட் பகுதியைச் சேர்ந்தவர் நரேந்திர வர்மா. விமானப்படை நிர்வாகவியல் கல்லூரியில் விங் கமாண்டராகப் பணியாற்றி வருகிறார். இவர், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை அகமதாபாத்தில் பணியாற்றினார்.
அப்போது, தொலைக் காட்சிகளில் காட்டப்பட்ட விளம்பரங்களைப் பார்த்து ஒரு பிரபல நிறுவனத்தின் சொகுசு காரை ரூ.13.40 லட்சத்துக்கு வாங்கியுள்ளார். கார் வாங்கிய ஓரிரு நாளிலேயே அவர் கோவைக்கு பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 28-ம் தேதி அகமதாபாத்தில் இருந்து கோவை வரும் வழியில், பவ்நகர் அருகே சாலையைக் கடந்த மான் மீது கார் மோதியது.
இதில் காருக்கு பலத்த சேதம் ஏற்பட்டது. காரில் பயணம் செய்தவர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. 'விபத்தின்போது காரில் இருக்கும் 6 உயிர் காக்கும் காற்றுப் பைகளும் செயல்பட்டு, பயணம் செய்பவர்களைக் காப்பாற்றும்' என்று விளம்பரத்தில் கூறியிருந்த நிலையில், இந்த விபத்தின்போது காரில் இருந்த 6 காற்றுப் பைகளில் ஒன்று கூட வேலை செய்யவில்லையாம்.
விபத்துக்குப் பின்னர், அந்த காரை சரிவர பழுது நீக்கிக் கொடுக்காமல் ரூ.2.83 லட்சத்தை வசூலித்துக் கொண்டனராம்.
'காரின் ஏ.சி., கதவுகள், இன்ஜின் போன்றவை சரிவர வேலை செய்யவில்லை.
காற்றுப் பை தொடர்பான புகார்கள் நிவர்த்தி செய்யப்படவில்லை. விளம்பரம் மூலம் தவறான வாக்குறுதி அளித்ததுடன், சரிவர பழுதுநீக்கிக் கொடுக்காத கார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கோரி கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் அவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
தனக்கு ரூ.19.75 லட்சம் இழப்பீடு கொடுப்பதுடன், வேறு கார் வழங்க வேண்டும் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.