தமிழகம்

போதையில் கார் ஓட்டி விபத்து: கார் பந்தய வீரர், நண்பரின் ஜாமீன் மனு தள்ளுபடி

செய்திப்பிரிவு

போதையில் சொகுசு காரை ஓட்டிச்சென்று ஆட்டோக்கள் மீது மோதி, ஒரு ஆட்டோ ஓட்டுநர் உயிரிழக்க காரணமாக இருந்த கார் பந்தய வீரர் மற்றும் அவரது நண்பரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

கார் பந்தய வீரரும், சட்ட மாணவருமான விகாஷ் ஆனந்த் மற்றும் அவரது நண்பர் சரண்குமார் ஆகியோர் சென்னை ஆழ்வார்பேட்டை ராதாகிருஷ்ணன் சாலையில் கடந்த 19-ம் தேதி அதிகாலை சொகுசு காரில் வேகமாக வந்தனர். கார் தாறுமாறாக ஓடி, சாலையோரம் வரிசையாக நிறுத்தியிருந்த ஆட்டோக்கள் மீது மோதியது. இதில் 10 ஆட்டோக்கள் சேதமடைந்தன. ஆட்டோவில் தூங்கிக்கொண்டிருந்த ஆறுமுகம் என்ற ஓட்டுநர் பலியானார். பல ஆட்டோ ஓட்டுநர்கள் படுகாயம் அடைந்தனர். விகாஷ் மற்றும் அவரது நண்பர் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு போதையில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விகாஷ் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனுவில், ‘‘சம்பவத்தன்று காரை நான் ஓட்டவில்லை. காரின் முன் பக்க டயர் பஞ்சராகிவிட்டது. இதனால்தான் விபத்து நேரிட்டது. அக்டோபர் 20-ம் தேதிமுதல் தேர்வுகள் நடக்க இருப்பதால், சட்ட மாணவரான எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்’’ என்று கோரியிருந்தார். அவரது நண்பர் சரண் குமார் சார்பிலும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்களை நேற்று விசாரித்த முதன்மை அமர்வு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், இருவரது ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT