நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மக்களிடம் இருந்து இணையம் வழியாக புகார் மனுக்களைப் பெற்று, அதற்கு தீர்வு காணும் முயற்சியில் திமுகவும், அதிமுகவும் ஈடுபட்டுள்ளன.
தொழில்நுட்ப வளர்ச்சியால் இணைய தளங்களின் வாயிலாக, எம்.எல்.ஏக்கள் சிலர் தங்கள் தொகுதி மக்களிடம் இருந்து புகார்கள், கோரிக்கை மனுக்களைப் பெறுகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே இப்போது, முகநூல், மின்னஞ்சல் மூலமாக மாவட்ட மக்களின் பிரச்சினைகளை கேட்டு வருகின்றன.
திமுக புகார் பெட்டி
நாகர்கோவில் திமுக எல்எல்ஏ சுரேஷ்ராஜன், முகநூல் மூலம் நேரலையில் தொகுதி மக்களோடு உரையாடுகிறார். `ஆன்லைன் புகார் பெட்டி’ என்ற தனி வலைதளத்தை அறிமுகம் செய்துள்ளார். தொகுதியில் நிலவும் பிரச்சினைகளை இதில் பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மின்னஞ்சலில் அதிமுக!
அதிமுக மாவட்டச் செயலாளர் விஜயகுமார் எம்.பி. ``அரசு ரீதியான அடிப்படை தேவை எதுவாக இருந்தாலும் , kumariadmkvoice@gmail.com என்ற முகவரிக்கு மின்அஞ்சல் அனுப்புங்கள்” என, சமூக வலைதளத்தில அறிக்கை வெளியிட்டுள்ளார். திமுக, அதிமுக மாவட்டச் செயலாளர்களின் இந்த அறிவிப்புக்கு பின்பு இருவருக்கும் ஏராளமான மக்கள் பிரச்சினைகள், கோரிக்கைகள் வருகின்றன.
சுரேஷ்ராஜன் கூறும்போது,’’ ஆன்லைன் புகார் பெட்டி ஆரம்பித்த முதல் இரு நாள்களுக்கு 150 புகார்களுக்கு மேல் வந்தன. இப்போது 60 முதல் 75 புகார்கள் வரை வருகின்றன. அதிகாரிகளுக்கு அதை அனுப்பி வைப்பதுடன், அந்த புகாரை பின் தொடரவும் செய்கிறேன்” என்றார்.
அதிமுக மாவட்டச் செயலாளர் விஜயகுமார் கூறும்போது, ``மாடத்தட்டுவிளை ஆரம்ப சுகாதார நிலையத்தை திறக்க வேண்டும் என வந்த புகாரைத் தொடர்ந்து, அதிகாரிகளுடன் பேசி விரைவில் திறப்பு விழா நடத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சில கிராமப் பகுதிகளுக்கு நிழற்குடை வேண்டும் என கோரியுள்ளனர். எள்ளுவிளையில் மின் விளக்கு வசதி கேட்டுள்ளனர். இது குறித்து இராஜாக்கமங்கல மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து, அவர்கள் ஆய்வு செய்கின்றனர்”என தெரிவித்தார்.