பழநி கிரிவீதி உள்பட நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை 2 மாதத்தில் அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் அருண் சுப்பிரமணியன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
பழநி முருகன் கோயிலிலுக்கு தைப்பூசத்தின் போது பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக செல்வது வழக்கம். பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக பல்வேறு விதமான காவடிகளையும், வேலையும் சுமந்து கிரிவீதி வழியாக கோயிலுக்கு செல்வர்.
தமிழக அரசின் வசமிருந்த கிரிவீதி 1974-ல் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது கிரிவீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பது உள்பட கோயில் நிர்வாகத்துக்கு அரசு பல்வேறு நிபந்தனைகளை விதித்தது. இந்த நிபந்தனைகளை கோயில் நிர்வாகம் நிறைவேற்றவில்லை.
கிரிவீதியில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது. இதனால் பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் பல சிரமங்களை சந்திக்க நேரிடுகிறது. சாதாரண நாட்களிலேயே கிரிவீதியில் அதிக நெருக்கடி இருக்கும். லட்சக்கணக்கான பக்தர்கள் வரும் விழாக்காலத்தில் மேலும் நெரிசல் அதிகமாக இருக்கும். பழநி கோயிலுக்கு பக்தர்களால் கோடிக்கணக்கில் வருமானம் வருகிறது. வருமானம் ஈட்டுவதில் ஆர்வம் காட்டும் கோயில் நிர்வாகம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை.
கிரிவீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற 2013-ல் வழக்கு தொடர்ந்த போது, ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து தற்காலிகமாக ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. கிரிவீதியைில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் முளைத்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பாதயாத்திரையாக பக்தர்களில் 125 பேர் விபத்துகளால் உயிரிழப்பதாக, ‘தி இந்து – தமிழ்’ நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. பெரும்பாலான விபத்துகள் சாலையோர ஆக்கிரமிப்புகளாகவும், சாலையோர கடைகளாலும் ஏற்படுகின்றன. தைப்பூசம் உள்ளிட்ட விழா காலங்களில் காரைக்குடி- பழநி, தாராபுரம்- பழநி, வடமதுரை- ஒட்டன்சத்திரம், திண்டுக்கல்- பழநிச் சாலைகளில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
இந்தாண்டு தைப்பூசத் திருவிழா 3.2.2017-ல் தொடங்கி, 15.2.2017-ல் முடிகிறது. எனவே பழநியில் கிரிவீதி, சன்னதி தெரு, புறநகர் சாலைகள், நெடுஞ்சாலைகள், மாவட்டச் சாலைகள் என நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து சாலைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, பக்தர்களின் பாதுகாப்பு, சுகாதாரத்தை உறுதி செய்யவும், ஆக்கிரமிப்புகளை நிரந்தமாக அகற்றவும், மீண்டும் ஆக்கிரமிப்புகள் செய்யப்படாமல் பாதுகாக்கவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் அமர்வில் திங்கள் கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப்பின் பழநி கிரிவீதி மற்றும் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து சாலைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை 2 மாதத்தில் அகற்ற மாவட்ட நிர்வாகம், நகராட்சி மற்றும் கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.