அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் கைகொடுத்த திருச்சி ஜி கார்னர் மைதானம், தனிக் கட்சி தொடங்கியுள்ள மத்திய முன்னாள் அமைச்சர் ஜி.கே.வாசனுக்கும் வெற்றிக்களமாக அமையுமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் நோக்கர்களிடையே எழுந்துள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், காங்கிரஸ் கட்சி யிலிருந்து விலகி தற்போது புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். கட்சியின் கொடியை அவர் நேற்று முன்தினம் சென்னையில் அறிமுகப்படுத்தினார். இதைத் தொடர்ந்து கட்சியின் பெயர் மற்றும் சின்னம் அறிமுக பொதுக்கூட்டம் திருச்சி ஜி கார்னர் மைதானத்தில் இன்று (நவ.28) மாலை நடைபெறுகிறது.
இந்த பொதுக்கூட்டத்துக்கு தமிழகம் முழுவதிலுமிருந்து ஏறத் தாழ 2.5 லட்சம் பேர் வருவார்கள் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். பொதுக்கூட்ட மேடை மற்றும் தொண்டர்கள் அமர இருக்கைகள், மின்விளக்கு என 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் மைதானம் தயாராகி வருகிறது.
மறைந்த ஜி.கே.மூப்பனார் தொடங்கிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் நிர்வாகிகளாகவும், ஆதரவாளர்களாகவும் இருந்த வர்கள் கூட்டத்துக்கு தொண்டர் களை அழைத்து வரும் ஏற்பாடு களைச் செய்து வருகின்றனர்.
மைதான சென்டிமென்ட்
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பொன்மலை செல்லும் வழியில் அமைந்துள்ளது ஜி கார்னர் மைதானம். இந்த இடம் தெற்கு ரயில்வே நிர்வாகத்துக்கு சொந்தமானது. ரயில்வே நிர்வாகத்துக்கு உரிய வாடகையைச் செலுத்திவிட்டு, இந்த மைதானத்தில் பொதுக்கூட் டங்கள், மாநாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
கடந்த 2010-ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு எதிராக அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா மிகப் பெரிய ஆர்ப்பாட்டத்தை இந்த மைதானத்தில் நடத்தினார். இதில், திமுக அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து, மக்களின் கவனத்தை ஈர்த்தார் ஜெயலலிதா. இதைத் தொடர்ந்து 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று, தமிழகத்தின் முதல்வராகவும் அவர் பொறுப்பேற்றார்.
தொடர்ந்து, மக்களவைத் தேர்தலில் இந்த மைதானத்தில் தான் பிரச்சார பொதுக் கூட்டத்தை ஜெயலலிதா நடத்தினார். இந்த தேர்தலில் 37 தொகுதிகளை அதிமுக கைப்பற்றியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26-ம் தேதி பாரதிய ஜனதா கட்சியின் இளந் தாமரை மாநாடு இந்த மைதானத் தில் நடைபெற்றது. அப்போது குஜராத் முதல்வராகவும், பாஜக வின் பிரதமர் வேட்பாளராகவும் முன்னிறுத்தப்பட்ட நரேந்திர மோடி பங்கேற்றார். இந்த மாநாட்டில், சுமார் 80,000 பேருக்கு மேல் பங்கேற்றனர். இந்த மாநாடுக்கு கிடைத்த வரவேற்பு பாஜகவுக்கு பெரும் ஊக்கத்தை அளித்தது என்றும் சொல்லலாம். இதைத் தொடர்ந்து நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக தனிப்பெருங்கட்சியாக வெற்றி பெற்று, நரேந்திர மோடி பிரதமராகவும் பதவியேற்றார்.
இந்தவகையில், புதிய கட்சி தொடங்கியுள்ள ஜி.கே.வாசனின் முதல் பொதுக்கூட்டம் இந்த மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. ஜி கார்னர் மைதானத்தின் வெற்றி சென்டிமென்ட் காரண மாகவே இந்த இடத்தை தேர்வு செய்ததாகவும், இதன் மூலம் தமிழக அரசியலில் மிகப்பெரிய சக்தியாக வாசனின் புதிய கட்சி உருவாகும் என்பது ஐயமில்லை என்றும் கூறுகின்றனர் அவரது ஆதரவாளர்கள்.