மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை விவகாரத்தில் ஆளுநர் பொய் தகவல் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியுமா? புதுச்சேரி மக்களையும், மாணவ மாணவிகளையும் திசை திருப்பி கலப்படமற்ற பொய்யை கூறிய துணை நிலை ஆளுநர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாக முதல்வர் நாராயணசாமி வாசித்த அறிக்கை விவரம்:
நீட் தேர்வில் தகுதி பெற்ற 613 மாணவர்களில் புதுச்சேரி மாநிலத்தின் ஒதுக்கீட்டான 162 இடங்களுக்காக 267 மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்தனர். அனைத்திந்திய ஒதுக்கீட்டுக்காக 1827 மாணவர்கள் விண்ணப்பித்தனர். சுமார் 30 மாணவர்கள் இந்திய அளவில் இதர மாநிலங்களில் உள்ள கல்லூரிகளில் சேர்ந்து விட்டனர்.
முதல் இரு கட்ட கலந்தாய்வில் 91 இடங்கள் புதுச்சேரி அரசின் ஒதுக்கீட்டாகவும், 118 இடங்கள் நிர்வாக இடங்களுக்கான ஒதுக்கீட்டாக ஆணை வழங்கப்பட்டது. பட்டய படிப்பில் உள்ள இடங்களில் 13 புதுச்சேரி அரசு இடங்களாக நிரப்பப்பட்டது.
இரண்டு கலந்தாய்வு முடிவில் புதுச்சேரி அரசு இடங்களில் 71 இடங்களும் நிர்வாக ஒதுக்கீட்டில் காலியாக இருந்தன. இரண்டு கட்ட கலந்தாய்வு நடந்து முடிந்தது.
கடந்த 30ம் தேதி ஆளுநர் ஆளுநர் சென்டாக் நடைபெறும் இடத்துக்கு சென்று அரசு மீது உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். புதுச்சேரி அரசு 71 இடங்களை தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு அளித்து விட்டதாக பொய் தகவல் தெரிவித்தார். அதுமட்டுமில்லாமல் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் ஊழல் செய்து உள்ளார்கள்.
நான் தலையிட்டு சரி செய்தேன் என்று கூறினார். துணை நிலை ஆளுநர் இக்குற்றச்சாட்டுகளை நிருபிக்க முடியுமா என்று சவால் விடுகிறேன். புதுச்சேரி மக்களையும், மாணவ மாணவிகளையும் திசை திருப்பி கலப்படமற்ற பொய்யை கூறிய துணை நிலை ஆளுநர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இதுபோன்று மக்களையும், மாணவர்களையும் உண்மைக்கு புறம்பாக திசை திருப்பும்துணை நிலை ஆளுநரின் செயல்பாடுகளை சட்டப்பேரவையிலும், மக்கள் மன்றத்திலும் வைக்கிறேன்.
புதுச்சேரியில் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் அரசு இடங்கள் முறையாக நிரப்பப்பட்டுள்ளது. இறுதி கட்ட கலந்தாய்வில் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 20 மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை தரப்பட்டது. அதற்கான கட்டண விகிதம் சுமார் ரூ.50 லட்சம் தரப்பட்டது.
அதற்கான கட்டண விகிதம் ரூ.50 லட்சம் என்பதால் அந்த சேரக்கை ஆணையை அந்த மாணவர்கள் மறுத்து விட்டனர். ஆனால், கடந்த 31-ம் தேதி நிகர்நிலை பல்கலைக்கழக கட்டணம் ரூ. 5.5 லட்சம் மட்டுமே என்று ஆளுநர் அறிவித்தார். நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ரூ.5.5 லட்சத்தில் மருத்துவ மேற்படிப்பு இடம் வாங்கி தருகிறேன் என்று அறிவித்தார். ஆனால் அவரது அறிவிப்பை தொடர்ந்து மாணவர்கள் இன்றுவரை சேர முடியாமல் தெருவில் நிற்கின்றனர்.
அவரது வாய்மொழியின் அடிப்படையில் சேர்க்கை ஆணையை 22 பேர் பெற்றனர். ஆனால் அதன்பிறகு நிகர்நிலை பல்கலைக்கழக கட்டணத்தை இந்திய மருத்துவ கவுன்சில், மத்திய சுகாதார அமைச்சகம் , மனிதவளமேம்பாட்டுத்துறை நிர்ணயிக்கும் என்றார். இதன் மூலமே முன்னுக்கு பின் முரணாக அவர் தெரிவித்துள்ளது தெரிகிறது.
எம்சிஐ அறிவுறுத்தல்படி சென்டாக் கலந்தாய்வு இரண்டு முறை மட்டுமே நடத்த வேண்டும். இரண்டு கலந்தாய்வு முடிந்த பிறகு அகில இந்திய அளவில் மாப் அப் கலந்தாய்வும் முடிந்த பின்பு 31-ம் தேதியன்று மூன்றாவது கலந்தாய்வு நடத்த ஆளுநர் எழுத்து பூர்வமாக உத்தரவிட்டார். இச்செயல் எம்சிஐ மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவுகளுக்கு புறம்பானது. இந்த அதிகாரத்தை அவருக்கு யார் வழங்கியது என்று குறிப்பிட்டார்.