தமிழகம்

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த கட்சிகள் கோரிக்கை

செய்திப்பிரிவு

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் பெரும்பாலான கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை மத்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் அரசியல் கட்சியினருடன் தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடனான தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை நடத்தியது. இதில், மத்திய துணை தேர்தல் ஆணையர் சுதிர் திரிபாதி, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் கலந்து கொண்டனர். கூட்டம் காலை 11 மணிக்கு தொடங்கியது.

அதிமுக சார்பில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், மனோஜ் பாண்டியன் எம்.பி., திமுக சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., மாநில வக்கீல் அணி இணைச் செயலாளர் கிரிராஜன், காங்கிரஸ் சார்பில் பொதுச் செயலாளர் சக்திவடிவேல், சைதை ரவி, பாஜக சார்பில் மாநிலச் செயலாளர் ஆதவன், தேமுதிக சார்பில் கொள்கை பரப்புச் செயலாளர் சந்திரகுமார், பார்த்தசாரதி எம்எல்ஏ, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினர்கள் பி.சேதுராமன், டி.எம்.மூர்த்தி, மார்க்சிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், எஸ்.ரமணி, பகுஜன் சமாஜ் மாநில செயலாளர் ரஜினிகாந்த், வடசென்னை தலைவர் ஓய்.ஏ.நாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். பெரும்பாலான கட்சிகள், தமிழகத்தில் மக்களவைத் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என கருத்து தெரிவித்தன.

கூட்டம் குறித்து நிருபர்களிடம் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் கூறியதாவது:

தமிழகத்தில் எந்தெந்த தேதிகளில், எத்தனைக் கட்டங்களாக தேர்தல் நடத்தலாம் என அரசியல் கட்சிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. வாக்காளர் பட்டியல் திருத்தம், தேர்தல் விதிமுறைகள், தேர்தல் ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடத்தினோம். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், அரசியல் கட்சிகளின் ஆலோசனைகள் எல்லாம் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்படும். அதற்கேற்ப, தமிழகத்தில் எத்தனைக் கட்டங்களாக, எந்தெந்த தேதிகளில் தேர்தல் நடத்தலாம் என ஆணையம் முடிவு செய்யும்.

இவ்வாறு பிரவீன் குமார் கூறினார்.

SCROLL FOR NEXT