மகன், மருமகளை தொடர்ந்து மகள்களாலும் முதியோர்கள் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகின்றனர் என்று முதியோர் நல டாக்டர் வி.எஸ்.நடராஜன் தெரிவித்தார்.
உலக சுகாதார நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 15-ம் தேதியை முதியோர் வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு தினமாக அனுசரித்து வருகிறது. அன்றைய தினம் முதியோர் நலனில் அக்கறையுள்ள தனியார் தொண்டு நிறுவனங்கள் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. இந்தியாவில் முதல் முதியோர் நல டாக்டர் வி.எஸ்.நடராஜன், கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக முதியோர் மருத்துவ சேவையில் ஈடுபட்டு வருகிறார். முதியோர் நல அறக்கட்டளையைத் தொடங்கி பல்வேறு பணிகளை செய்து வருகிறார்.
முதியோர் வன்கொடுமை ஒழிப்பு தினம் குறித்து டாக்டர் வி.எஸ்.நடராஜன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
வெளிநாடுகளில் முதியோருக்கு ஓரளவு மரியாதையும், பாதுகாப்பும் உள்ளது. ஆனால், இந்தியாவில் முதியோர்களை கவனிக்காமல் இருப்பது, மனதளவில் துன்புறுத்துவது, திட்டுவது, அடிப்பது போன்றவை அதிகமாக நடக்கிறது. நமது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 8 சதவீதம் முதியோர்கள் உள்ளனர். இவர்களில் 32 சதவீதம், அதாவது மூன்றில் ஒரு முதியவர் கொடுமைப்படுத்தப்படுகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட ஆய்வில் 56 சதவீதம் முதியோர்கள் மகன்களாலும், 23 சதவீதம் முதியோர்கள் மருமகளாலும் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகின்றனர் என்று தெரியவந்தது.
மாணவர்களிடம் விழிப்புணர்வு
தற்போதைய ஆய்வில் மருமகளைப் போலவே மகள்களும் முதியோர்களை கொடுமைப்படுத்துவதாக தெரியவந்துள்ளது. பணம் மற்றும் சொத்துக்காக முதியோர்கள் அதிகம் துன்புறுத்தப்படுகின்றனர். அதேபோல் வருமானம் இல்லாத, உடல்நிலை சரியில்லாத முதியோர்களும் பாதிக்கப்படுகின்றனர். முதியோர் களை மதிக்க வேண்டும். அவர்களை அன்பாக கவனிக்க வேண்டும். அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வை 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளிடம் ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் அவர்கள் வளர்ந்த பிறகு முதியோர்களை மதிக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் இருக்கும்.
இவ்வாறு டாக்டர் வி.எஸ்.நடராஜன் தெரிவித்தார்.
டாக்டர் வி.எஸ்.நடராஜனின் முதியோர் நல மருத்துவ சேவையைப் பாராட்டிய பள்ளிக் கல்வித் துறை செயலாளர் டி.உதயச்சந்திரன், முதியோர் வன் கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு தினமான ஜூன் 15-ம் தேதியன்று பள்ளிகளில் மாணவ, மாணவிகள் முதியோரை மதிப்போம் என்ற உறுதி மொழியை எடுக்க வேண்டும். அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று தொடக்கக் கல்வி இயக்குநர், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர், மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குநருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி இன்று தமிழகம் முழுவதும் பள்ளிகளில் மாணவ, மாணவிகள் முதியோரை மதிப்போம் என்ற உறுதிமொழியை எடுக்க உள்ளனர்.
புத்தகம் வெளியீடு
டாக்டர் வி.எஸ்.நடராஜன் எழுதிய ‘முதியோரை மதிப்போம்’ என்ற புத்தக வெளியீட்டு விழா அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் இன்று நடக்கிறது. நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் புத்தகத்தை வெளியிடுகிறார். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் ‘முதியோரை மதிப்போம்’ என்ற உறுதிமொழியை எடுக்க உள்ளனர்.