அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி நரேந்திர மோடி பீகார் மாநிலம் பாட்னா வருகையை ஒட்டி நடந்த வெடிகுண்டு சம்பவத்தில் 6 பேர் பலியானதும், 83 பேர் படு காயமுற்றதும் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே பேசும்போது, “பாட்னா குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்கும். என்னைச் சந்தித்த பிகார் முதல்வர் நிதிஷ்குமார், குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பான தகவல்களை கொடுத்ததுடன், இந்த வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றும்படி கோரியுள்ளார். அவரது கோரிக்கையை ஏற்று இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், விழாக் காலங்களில் மக்கள் கூடும் இடங்களில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க பிகார் மாநிலத்தில் மத்திய பாதுகாப்பு படைகளை களமிறக்கவும் முடிவு செய்துள்ளோம். பிகார் மாநிலத்தில் தீவிரவாத தடுப்பு பிரிவுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.”என்றார்.
இதனிடையே இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் மூன்றாவது நபரை கைது செய்துள்ளது பாட்னா காவல்துறை.