சூரிய மின் சக்தி வாட்டர் ஹீட்டர்களுக்கான மத்திய அரசின் மானியம் திடீரென நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், ஹோட்டல்கள், தொழிற்துறையினர் மற்றும் வீடுகளுக்கான சூரிய மின்சக்தி நுகர்வோர் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.
உலகில் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான ஆதாரங்களான நிலக்கரி, தண்ணீர், எரிவாயு போன்றவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதாலும், புவி வெப்பமயமாதல், சுற்றுச் சூழல் சீர்கேடு போன்ற காரணங்களாலும், மரபுசாரா எரிசக்திக்கு, அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.
இந்தியாவிலும் மத்திய, மாநில அரசுகள் மரபுசாரா எரிசக்திகளான சூரிய மின்சக்தி, காற்றாலை மின்சக்தி, சூரியக் காற்றாலை மின் அமைப்பு, உயிரிக் கழிவு மூலம் மின் உற்பத்தி போன்றவற்றை ஊக்குவித்து வருகின்றன. இதற்காக மரபுசாரா எரிசக்தி உபகரணங்கள் விற்பனை செய்வோருக்கும், மரபுசாரா எரிசக்தி உற்பத்திக்கு முன் வருவோருக்கும், பல்வேறு சலுகைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.
தமிழகத்தில் வரும் 2015-ம் ஆண்டுக்குள் 3,000 மெகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதற்காக சூரியசக்திக் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதேநேரம், சூரிய சக்தி உபகரணங்கள் பொருத்த மத்திய அரசு சார்பில் 30 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. இந்த மானியம் தமிழகத்தில் எரிசக்தி மேம்பாட்டு முகமையான டெடா போன்ற மாநில அரசு நிறுவனங்கள் மூலம் வழங்கப்படுகின்றன. தமிழகத்தில் சூரிய சக்தி மேற்கூரை அமைப்புகள் பொருத்த, தமிழக அரசு கூடுதலாக 20 சதவீத மானியம் வழங்குகிறது.
இந்நிலையில், சூரிய மின்சக்தியில் இயங்கும் சோலார் வாட்டர் ஹீட்டர்களுக்கான 30 சதவீத மானியத்தை, மத்திய அரசு திடீரென நிறுத்தி வைத்துள்ளது. அக்டோபர் மாதம் முதல் 30 சதவீத மானியத்தை நிறுத்தி வைப்பதாக, மத்திய புதுப்பிக்கத்தக்க மற்றும் மரபுசாரா எரிசக்தி அமைச்சகத்தின் சூரிய சக்திப் பிரிவு செயலர் இதை அறிவித்துள்ளார்.
இதுகுறித்து, தமிழக எரிசக்தி மேம்பாட்டு முகமையும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. சூரியசக்தி வாட்டர் ஹீட்டர்களுக்கு மத்திய அரசு மானியம் நிறுத்தி விட்டதால், அக்டோபர் முதல் வாங்குவோர், மானியத்துக்காக விண்ணப்பிக்க வேண்டாமென்றும், மானியமின்றி அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனங்களில் சோலார் வாட்டர் ஹீட்டர் வாங்கிக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
சோலார் வாட்டர் ஹீட்டரைப் பொருத்தவரை, ஹோட்டல்கள், துணி, உணவு தொடர்பான தொழிற்துறையினர், வீடுகள் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்பட்டன. சோலார் வாட்டர் ஹீட்டர் மூலம், 100 லிட்டர் தண்ணீர் கொதிக்க வைத்துப் பயன்படுத்துவோருக்கு, தினமும் ஐந்து யூனிட் மின்சாரம் சேமிக்கப்படுகிறது. அதனால் சூரிய மின் சக்தி வாட்டர் ஹீட்டர்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
மத்திய அரசின் மானியம் திடீரென நிறுத்தி வைக்கப்பட்டதால், இனி புதிதாக சோலார் வாட்டர் ஹீட்டர் வாங்குவோர், அதிக நிதி செலவழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சூரிய சக்திக்கான வளர்ச்சித் திட்டத்தில் பின்னடைவு ஏற்படும் என்று, சூரியசக்தி உபகரண உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.