தமிழகம்

ரேஷன் கார்டுகளை அடிக்கடி கேட்டு இடையூறு செய்யும் கேரள போலீஸார்: தமிழக தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அதிருப்தி

ஆர்.செளந்தர்

ஆதார், ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களை கேரள போலீஸார் அடிக்கடி கேட்டு இடையூறு செய்வதாக தமிழக தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேயிலை, காபி, ஏலக்காய் தோட்டங்களில் தேனி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல ஆயிரம் பேர் தங்கி வேலை செய்து வருகின்றனர். இதற்கிடையில் இடுக்கி மாவட்டம் மூணாறில் சில மாதங்களுக்கு முன்பு இந்தியன் முஜாகுதின் என்கிற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தேஷீன்அக்தர், பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி வக்காஸ், சிமி இயக்கத்தைச் சேர்ந்த அப்ரீதி ஆகியோர் போலி ஆவணங்கள் மூலம் மூணாறில் தங்கிச் சென்றுள்ளதாக கேரள மாநில உளவு போலீஸார் தாமதமாகத் தெரிந்து கொண்டனர்.

இது குறித்து ‘தி இந்து’விடம் உத்தம பாளையத்தைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளி தேவி, பவுலின் ஆகியோர் கூறியதாவது:

கேரள தோட்ட வேலைக்கு புதிதாக சேருவோரிடம் ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகிய நகலைப் பெற்று தோட்ட நிர்வாகத்தினர் சரிபார்த்து இடுக்கி மாவட்டத்தில் உள்ள அந்தந்த காவல் நிலையங்களில் ஒப்படைப்பர்.

இந் நிலையில், சில மாதங்களுக்கு முன்பு தமிழகம், கேரளத்தைச் சேர்ந்த நிரந்த தொழிலாளர்கள் பலர் விருப்ப ஓய்வுபெற்றுவிட்டனர். இதனால் கூலியாட்கள் பற்றாக்குறை என்று கூறி இடைத்தரகர்கள் மூலம் சில தோட்ட நிர்வாகத்தினர் அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இருந்து ஏராளமான வடமாநிலத்தவரை போலி ஆவணம் மூலம் அழைத்து வந்து தோட்ட வேலையில் ஈடுபடுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதைக் கேரள போலீஸார் கண்காணிக்காமல் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் அமைந்திருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையில் நக்ஸலைட்டுகள் பதுங்கி இருந்த காரணத்தினால் தமிழகத் தொழிலாளர்கள் மீது சந்தேகம் அடைந்து தொடர்ந்து ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் போன்ற ஆவணங்களைப் பெற்று வருகின்றனர். பல முறை ஆவணங்களை கொடுத்த பிறகும் அடிக்கடி ஆவணங்கள் கேட்டு போலீஸார் தொந்தரவு கொடுக்கின்றனர் என்றனர்.

இது தொடர்பாக கேரள மாநில ஐ.என்.டி.யு.சி. மாநில செயலாளர் முனியாண்டியிடம் கேட்டபோது, கேரள தோட்ட வேலையில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வீடு கட்டித் தருவதற்காக முந்தைய உம்மன்சாண்டி அரசு ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருந்தது. இதற்காக தற்போது மூணாறில் தங்கியுள்ள ஏழை தொழிலாளர்களிடம் கேரள அரசு படிவம் வழங்கி பூர்த்தி செய்து, அதில் ஆதார், ரேஷன் கார்டு நகல்கள் இணைத்து பெறப்பட்டு வருகிறது.

ஆனால் தொடர்ந்து ஆவணங்கள் கேட்கபது குறித்து எனக்குத் தெரியாது விசாரித்து கூறுகிறேன் என்றார்.

இடுக்கி மாவட்ட காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பங்களாதேஷில் இருந்து 75 பேர் இந்தியர்கள் எனக் கூறி இடுக்கி மாவட்டத்தில் தோட்டத் தொழிலாளியாக வேலை செய்து வருவதாக மத்திய உளவுத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் காரணமாக வெளிநாடு, பிற மாநில தொழிலாளர்கள் யார்? யார்? வேலை செய்கின்றனர் என்று ஆவணங்களை சரி பார்க்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் அனைத்து தொழிலாளர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது என்றார்.

பிடிபட்ட 10 பேர் நக்ஸல்களா?

மூணாறு அருகே இடமலைக்குடி வனப் பகுதியில் நேற்றுமுன்தினம் அந்த மாநில வனத் துறையினர் ரோந்து சென்றனர். அப்போது இரண்டு பெண்கள் உட்பட 10 பேர் அங்கு தங்கியிருந்தது தெரிய வந்தது. அவர்களிடம் வனத் துறையினர் விசாரணை நடத்தியபோது அவர்கள் முண்ணுக்குப்பின் முரணாகப் பேசியதால், அவர்களை மூணாறு போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

போலீஸார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், கர்நாடகா மாநிலம், குன்சூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்கள் அடிமாலி அருகே கோழியினை பகுதியில் சில நாட்கள் தங்கிவிட்டு தற்போது இடமலைக்குடிக்கு வந்திருந்ததும் தெரியவந்தது. பிடிபட்டவர்கள் நக்ஸல்களாக இருக்குமோ? என்ற சந்தேகத்தின் பேரில் போலீஸார் அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்கின்றனர்.

SCROLL FOR NEXT