மின்வெட்டு உள்ளிட்ட தமிழக பிரச்சினைகளை பிரதமரிடம் முன்வைத்ததாக கூறிய தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமிழகத்தை அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் வஞ்சித்து வருவதாக குற்றம்சாட்டினார்.
டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று தனது கட்சி எம்.எல்.ஏ.க்கள் 21 பேருடன் இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் சந்தித்துப் பேசினார்.
பின்னர், இந்தச் சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் விஜயகாந்த் கூறியது:
"தமிழகத்தை அதிமுக, திமுக கட்சிகள் தொடர்ந்து வஞ்சித்து வருகின்றன. பிரதமரிடம் தமிழக மீனவர் பிரச்சினை, மாநிலங்களுக்கு இடையேயான தண்ணீர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேசினேன்.
தமிழக மீனவர் பிரச்சினையை மிகவும் கவனமாக கையாண்டு வருவதாக என்னிடம் பிரதமர் தெரிவித்தார். 'மீனவர் பிரச்சினை குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் மட்டுமே எழுதியிருக்கிறார். அவரும் இங்கு வந்து உங்களைப் போல் என்னை சந்தித்துப் பேசியிருக்கலாம். ஒருவேளை நீங்கள் தமிழக முதல்வராக இருந்திருந்தால், என்னை வந்து சந்தித்திருப்பீர்கள், பிரச்சினைகள் தீர்ந்திருக்கும்' என பிரதமர் கூறியது மகிழ்ச்சியளித்தது.
தண்ணீர் பிரச்சினை குறித்து பேசும்போது, அனைத்து மாநிலங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறினார். எல்லா மாநிலங்களையும் அனுசரித்துதான் பேசிவருவதாக அவர் கூறினார்.
தமிழக பட்ஜெட் மக்கள் போற்றும் விதத்தில் இல்லாமல், மக்கள் தூற்றும் விதத்தில் இருக்கிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதா மின்வெட்டுப் பிரச்சினை தீர்ந்துவிட்டதாக கூறுகிறார். ஆனால் இப்போதே மாநிலத்தில் 7 மணி நேரம் வரை மின்வெட்டு இருக்கிறது.
என்னை யாராவது தாக்கிப் பேசினால், அவர்களுக்கு ஜெயலலிதா பதவி வழங்குகிறார். மக்கள் பிரச்சினையை எடுத்துரைத்தால், அதற்கு தீர்வு கிடைக்காது, அதனாலேயே நான் சட்டசபைக்கு வருவதில்லை. ஒரு கட்சியை அழிக்க செலுத்தும் கவனத்தை மக்கள் பிரச்சினைகளை தீர்க்க ஜெயலலிதா கவனம் செலுத்துவதில்லை" என்றார் விஜயகாந்த்.
மேலும், "தமிழகத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டி, பிரதமரிடம் மனு ஒன்றை அளித்தேன்" என்றார்.
சட்ட விரோத மணல் கொள்ளை, காவிரி நதிநீர்ப் பிரச்சினை, முல்லைப் பெரியாறு அணை விவகாரம், அரிசி மீது சேவை வரி விதிப்பு, மின் பற்றாக்குறை, சட்டம் ஒழுங்கு பிரச்சினை, மாநிலத் தொழில் வளர்ச்சி, தமிழக மீனவர் பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்துள்ளார்.
தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாததற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் காரணம் என்ற அவர், தேர்தல் கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார். தேர்தல் கூட்டணி பற்றி பேச தாம் டெல்லிக்கு வரவில்லை என்றார் அவர்.