திருவள்ளுவர் சாதி, மத பேதங்களுக்கு அப்பாற்பட்டவர். கங்கைக் கரையில் அவரது சிலையை வைக்க அனுமதிக்க வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கவிஞர் வைரமுத்து எழுதிய வைரமுத்துவின் சிறுதைகள் நூலின் 12-ம் பதிப்பு வெளியீட்டு விழா டெல்லி தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வைரமுத்து பேசியதாவது:
வாழ்வின் பிரச்சினைகளைத் தீர்க்க இரண்டு வழிகள் உண்டு. ஒன்று எதிர்கொள்வது; மற்றொன்று ஏற்றுக் கொள்வது. படைப்பாளிகளைக் கொண்டாடுகிற சமூகம்தான் நாகரிகமான சமூகம். என்னைவிடச் சிறந்த படைப்பாளிகள் இருக்கிறார்கள். அவர்கள் கொண்டாடப்பட வேண்டும்.
தமிழ்நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட திருவள்ளுவர் சிலை கங்கைக் கரையில் தீட்டுப்பட்டுக் கிடக்கிறது. இதனால் தமிழர்கள் வேதனையில் இருக்கிறார்கள். திருவள்ளுவர் ஒரு இனத்துக்கோ, மதத்துக்கோ, சாதிக்கோ சொந்தமானவர் அல்லர். அவர் ஒட்டுமொத்த மனித குலத்துக்கே உரிமையானவர். இந்தியாவின் அறிவு வளம் என்பது திருவள்ளுவரையும் சேர்த்தால்தான் பூரணமாகும். எனவே உத்தரப்பிரதேசம் - உத்தரகாண்ட் அரசுகள் திருவள்ளுவர் சிலையை உரிய இடத்தில் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு வைரமுத்து பேசினார்.
விழாவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், டெல்லி தமிழ்ச் சங்கத் தலைவர் பாலசுப்ரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.