தமிழகம்

இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை பிரதமர் தலையிட்டு மீட்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் கோரிக்கை

செய்திப்பிரிவு

திமுக பொருளாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக மீனவர்களிடம் இருந்த கைப்பற்றிய மீன்பிடி படகுகள் அனைத்தையும் இலங்கை அரசு நாட்டுடைமை ஆக்கியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் 2014 ஜனவரி 27 முதல் 2016 நவம்பர் 2 வரை இரு நாட்டு மீனவர்கள் இடையே டெல்லியில் 4 முறை பேச்சுவார்த்தை நடந்தது.

பிறகு இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரா ஆகியோர் முன்னிலையில் கடந்த நவம்பர் 5-ம் தேதி பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது, ‘இலங்கை கடற்படை கைப்பற்றிய தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க வேண்டும், தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது, படகுகள், வலைகள் சேதப்படுத்துவதை நிறுத்த வேண்டும்’ என வலியுறுத்தப்பட்டது.

ஆனால். இந்தப் பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகுதான் இலங்கை கடற்படையின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. பாக் நீரிணைப் பகுதியில் மீன் பிடிக்க தமிழக மீனவர்களை அனுமதிக்க மாட்டோம் என இலங்கை அரசு அழுத்தம் திருத்தமாக தெரிவித்து வருகிறது. ஆனாலும் தமிழக மீனவர்களைக் காக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக அரசும் மத்திய அரசுக்கு போதுமான அழுத்தம் கொடுக்கவில்லை.

தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், அவற்றை இலங்கை அரசு நாட்டுடைமை ஆக்கியுள்ளது. எனவே, இதில் பிரதமர் மோடி நேரடியாக தலையிட்டு தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்கவும், இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய வும் நடவடிக்கை எடுக்க வேண் டும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT