தமிழகம்

தருமபுரி மாவட்டத்தில் விதி மீறும் தனியார் பேருந்துகளால் பெருகும் விபத்துகள்: கட்டுப்படுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

செய்திப்பிரிவு

தருமபுரி மாவட்டத்தில் விதிமீறி இயக்கப்படும் தனியார் பேருந்துகளை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்துகளில் பல தொடர்ந்து விதிமுறைகளை மீறியும் அதிவேகத்திலும் இயக்கப்படு வதாகவும், போக்குவரத்துத் துறை இதை கண்டுகொள்வதில்லை எனவும் புகார் எழுந்துள்ளது. இதுபற்றி சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியது:

தருமபுரியில் இருந்து சேலம், கிருஷ்ணகிரி, ஓசூர், பென்னாகரம், ஏரியூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, ஊத்தங்கரை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு தனியார் பேருந்துகள் ஏராளமாக இயக்கப் படுகிறது. இவ்வாறு இயக்கப்படும் தனியார் பேருந்துகளில் பெரும்பாலானவை ‘டைமிங் பிரச்சினை’ என்பதை மட்டுமே காரணமாகக் கூறி விதிகளை மீறி இயக்கப்படுகின்றன. இதனால் பேருந்துகளில் செல்லும் பயணிகள், சாலைகளில் செல்வோர் என பல தரப்பினருக்கும் ஆபத்தான சூழல் நிலவுகிறது.

தொப்பூர் கணவாய் போன்ற கடும் ஆபத்தும் சவாலும் மிக்க தேசிய நெடுஞ்சாலையில் ஒவ்வொரு மார்க்கத்திலும் 2 வழிப்பாதைகள் உள்ளது. அரிதாகவும், அவசியம் மிக்க இடங்களில் மட்டுமே 3 வழிப்பாதைகள் உள்ளது.

இந்நிலையில், கணவாயில் ஒன்றையொன்று ஒட்டியபடி இரு கனரக வாகனங்கள் பயணித்துக் கொண்டிருக்கும்போது அதையொட்டி இடப்புறம் இருசக்கர வாகனம் மட்டுமே செல்லும் அளவில் தான் தார்சாலையில் இடம் இருக்கும். அந்த இடத்தையும், அதையொட்டிள்ள மண் பரப்பையும் பயன்படுத்தி அசுர வேகத்தில் பல தனியார் பேருந்துகள் ஓவர்டேக் செய்கின்றன. இந்த வழக்கம் என்றாவது ஒருநாள் பெரும் விபரீதத்தை ஏற்படுத்தும்.

இதுதவிர, அதி பயங்கர வேகம், சாலையில் செல்லும் இதர வாகன ஓட்டிகள் துள்ளி அச்சமடையும் வகையிலான ஏர் ஹாரன்களை பயன்படுத்துவதிலும் பெரும்பாலான தனியார் பேருந்துகள் விதிகளை தொடர்ந்து மீறி வருகின்றன. இவை அனைத்தையும் கட்டுப்படுத்த வேண்டிய போக்குவரத்துத் துறை அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் அலட்சியமாக உள்ளதால் இந்த அவலம் தொடர்கிறது. அதற்கு பலனாக நேற்று அரசு ஜீப் மீது தனியார் பேருந்து மோதியதில் அரசு வாகன ஓட்டுநர் ஒருவர் பலியாகியுள்ளார்.

பாலம் அமைக்கும் பணி நடப்பதால், தற்காலிகமாக ஒகேனக்கல்லுக்கு செல்ல வேறொரு வழியையும், ஒகேனக்கல்லில் இருந்து திரும்பும்போது வேறொரு வழித் தடத்தையும் பயன்படுத்துமாறு சில மாதங்களுக்கு முன்பு மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்து இந்த விதியையும் பின்பற்றவில்லை.

எனவே, பயணிகளின் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக வலியுறுத்தப்படும் விதிமுறைகளை தனியார் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் முறையாக பின்பற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கூறினர்.

SCROLL FOR NEXT