சென்னையில் அரசுப் பள்ளி கழிவறையில் இருந்து நேற்று காலை திடீரென மண் பீறிட்டு வெளியேறியது. சுமார் 2 டன் அளவுக்கு மண் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பள்ளி அமைந்துள்ள பகுதியில் பூமிக்கு அடியில் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை தோண்டும் பணி நடைபெறுவதால் இந்த சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே சிஎம்டிஏ பாலம் அடியில் அமைந்துள்ளது டாக்டர் அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளி. இங்கு 107 மாணவர்களும் 15 மாணவிகளும் படித்து வருகின்றனர். ஆங்கில ஆசிரியை, அலுவலகப் பணி காரணமாக நேற்று காலை 6.45 மணி அளவில் முன்கூட்டியே பள்ளிக்கு வந்துவிட்டார். அவர் பள்ளி வளாகத்தில் உள்ள பெண்கள் கழிப்பறையில் இருந்து மண் வெளி யேறுவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியை கண்மணிக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலறிந்து பள்ளிக் கல்வித்துறை, பொதுப் பணித்துறை, வருவாய்த்துறை மற்றும் மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகளும் அங்கு வந்தனர். எழும்பூர் - சென்ட்ரல் ரயில் நிலை யங்கள் இடையே நடந்துவரும் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணி காரணமாக இது போன்று பூமிக்கடியில் இருந்து மண் பீறிட்டு வெளியேறியது தெரியவந்தது. காலை 8 மணி அளவில் மண் வெளியே கொட்டுவது நின்றுவிட்டது. கழிவறையில் இருந்து சுமார் 2 டன் அளவுக்கு ரசாயன கலவை கலந்த மண் வெளியேறி குவிந்துவிட்டது.
உடனடியாக மெட்ரோ ரயில் திட்டப் பணி யாளர்கள் வரவழைக்கப்பட்டு மினி லாரிகளில் மண்ணை வாரி வேறு பகுதியில் கொட்டினர். பள்ளிக்கு அரைநாள் விடுமுறை விடப்பட்டது.
மத்திய சென்னை எம்பி எஸ்.ஆர்.விஜயகுமார், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அனிதா ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு தலைமை ஆசிரியையிடம் விவரங்கள் கேட்டறிந்தனர். கழிப்பறை கட்டிடம் சேதமடைந்தால் அதற்குப் பதில் புதிய கழிப்பறை கட்டிடம் கட்டிக்கொடுப்பதாக தலைமை ஆசிரியையிடம் மெட்ரோ ரயில் அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
மெட்ரோ ரயில் திட்டத்துக்காக எழும்பூர் ரயில் நிலையம் - சென்ட்ரல் ரயில் நிலையம் இடையே சுரங்கப் பாதை தோண்டும் பணி நடந்து வருகிறது.
இந்த வழித்தடம் சம்பவம் நடந்த டாக்டர் அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அடியில் செல்கிறது. ராட்சத டனல் போரிங் இயந்திரத்தைக் கொண்டு சுரங்கம் தோண்டப்படும். அதே நேரத்தில் மணலின் உறுதித் தன்மையை அதிகப்படுத்துவதற்காக ரசாயனம் கலந்த கலவையானது அதிக அழுத்தத்துடன் செலுத்தப்படும். இவ்வாறு செலுத்தப்படும்போது எங்கேனும் பலவீனமான பகுதி அல்லது மூடப்படாத பழைய போர்வெல் இருந்தால் அதன் வழியாக ரசாயனம் கலந்த மண் கலவை வெளியேறி பீறிட்டெழும். அத்தகைய சம்பவம்தான் எழும்பூர் அரசுப் பள்ளியிலும் நிகழ்ந்துள்ளது.
மெட்ரோ அதிகாரி விளக்கம்
சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாளர் (சுரங்கம்) ஜெயகுமார் கூறியதாவது:
எழும்பூர் - சென்ட்ரல் இடையே பூமிக்கு அடியில் 60 அடி ஆழம், 6 மீட்டர் அகலம் அளவுக்கு சுரங்கப் பாதை தோண்டும் பணி நடந்து வருகிறது. அரசுப் பள்ளியின் கழிப்பறையில் ஏதேனும் பழைய போர்வெல் மூடப்படாமல் இருந்திருக்கலாம். சுரங்கப்பாதை தோண்டும்போது ஏற்பட்ட அழுத்தம் காரணமாக அதிலிருந்து மண் வெளியேறியிருக்கிறது. சுரங்கம் தோண்டும் பணி தற்போது இந்த இடத்தை கடந்துசென்றுவிட்டது. எனவே, மீண்டும் மண் கொட்டுவதற்கு வாய்ப்பில்லை.
எழும்பூர் - சென்ட்ரல் இடையே பூமிக்கு அடியில் 60 அடி ஆழம், 6 மீட்டர் அகலம் அளவுக்கு சுரங்கப் பாதை தோண்டும் பணி நடந்து வருகிறது. அரசுப் பள்ளியின் கழிப்பறையில் ஏதேனும் பழைய போர்வெல் மூடப்படாமல் இருந்திருக்கலாம். சுரங்கப்பாதை தோண்டும்போது ஏற்பட்ட அழுத்தம் காரணமாக அதிலிருந்து மண் வெளியேறியிருக்கிறது. சுரங்கம் தோண்டும் பணி தற்போது இந்த இடத்தை கடந்துசென்றுவிட்டது. எனவே, மீண்டும் மண் கொட்டுவதற்கு வாய்ப்பில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.