சென்னை மாநகராட்சி எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு சங்கத்தில் ரூ.50 கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. 1998-ம் ஆண்டு முதல் 2009 வரையிலான 11 ஆண்டுகளில் இந்த முறைகேடு நடந்திருப்பதாக கூறப்படுகிறது.
எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம்
உயர்க்கொல்லி நோயான எய்ட்ஸ் உலகையே உலுக்கி வருகிறது. இதனால் உலகம் முழுவதும் உள்ள நாடுகள் எய்ட்ஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த கோடிக்கணக்கில் பணம் செலவிட்டு வருகிறது. அந்த வகையில் இந்திய அரசும் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் (என்.ஏ.சி.ஓ.) மூலம் மாநில அரசுகளுக்கும், பல்வேறு சங்கங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது.
சென்னையில் எய்ட்ஸ் நோய் பரவுவதைத் தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் சென்னை மாநகராட்சியில், சென்னை எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு சங்கம், தமிழ்நாடு சொசைட்டிகளின் சட்டம் 1975-ன்படி கடந்த 1998-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. இதன் அலுவலகம், சென்னை மயிலாப்பூர் திரு.வி.க. சாலையில் அமைந்துள்ளது.
ரூ.50 கோடி ஊழல் புகார்
சென்னை எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு சங்கத்தின் காப்பாளராக சென்னை மாநகராட்சி மேயர் இருக்கிறார். தலைவராக மாநகராட்சி கமிஷனரும், திட்ட இயக்குனராக மாநகராட்சி துணை கமிஷனரும் (சுகாதாரம்) உள்ளனர். இச்சங்கத்திற்கு மத்திய குடும்ப நலம் மற்றும் சுகாதார அமைச்சகத்தின் கீ்ழ் இயங்கும் தேசிய எய்ட்ஸ் தடுப்பு கட்டுப்பாட்டு அமைப்பு ஆண்டுதோறும் குறைந்தபட்சம் ரூ.1 கோடியில் இருந்து அதிகபட்சம் ரூ.7 கோடி வரை நிதியுதவி அளித்து வருகிறது. சங்க நிர்வாக முறைகேடுகள் காரணமாக ரூ.50 கோடிக்கும் மேல் ஊழல் நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது என்றும், இதுகுறித்து தற்போதைய மேயர் சைதை துரைசாமியின் கவனத்திற்கு கொண்டு போய், ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
மாநகராட்சியில் வருவாய் அதிகாரியாக இருந்து ஓய்வுபெற்றவர், சென்னை மாநகராட்சி எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பின் நிர்வாக அலுவலர் (பொறுப்பு) மற்றும் ஒருங்கிணைப்பு ஆலோசகராக, 17-9-2010 அன்று நியமிக்கப்பட்டார். எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் ஒவ்வொரு நிகழ்வும், சங்க விதிகளின்படி நடக்கவில்லை என்று சமீபத்தில் குற்றச்சாட்டு எழுந்தது.
திடீர் பதவி விலகல்
இந்த நிலையில், மேற்படி நிர்வாக அலுவலரின் பணி ஒப்பந்த காலம் 31-3-2013 அன்றுடன் முடிவடைந்தது. தனக்கு பணி நீட்டிப்பு வேண்டும் என்று அவரிடம் இருந்து கோரிக்கை வரப்பெறவில்லை என்றும் அதனால் அவரது பதவிக்காலம் அன்றைய தேதியுடன் முடிந்துவிட்டதாகவும் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, ஒரு வாரத்திற்குள் பணியில் வந்து சேரும்படி அவருக்கு கடந்த ஏப்ரல் 8-ந் தேதி திட்ட இயக்குனர் உத்தரவிட்டார். அதற்கு தனக்கு உடல்நிலை சரியில்லை என்று இ-மெயிலில் பதில் அனுப்பிய அந்த அதிகாரி, இ-மெயிலையே ராஜினாமா கடிதமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். அதைத்தொடர்ந்து அந்த அதிகாரியின் ராஜினாமாவை, திட்ட இயக்குனரும் ஏற்றுக் கொண்டார். மாநகராட்சி கமிஷனரால் நியமன ஆணை வழங்கப்பட்ட அந்த நிர்வாக அதிகாரியின் ராஜினாமா கடிதம், மேயர் மற்றும் கமிஷனர் ஒப்புதல் இல்லாமல் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பது ஏன் என்பது மர்மமாக இருக்கிறது.
எப்படி நடந்தது முறைகேடுகள்?
சென்னை மாநகராட்சி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து வலுவான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. எய்ட்ஸ் தடுப்புப் பணியில் பிரபலமாகாத தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு நிதி ஒதுக்கியதில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. சங்கப் பணியாளர்களை நியமிக்கும்போது, முறையாக பத்திரிகைகளில் விளம்பரம் செய்து, தகுதித் தேர்வு, நேர்முகத் தேர்வு நடத்தி, தேர்வுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுபவர்களே ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்ற சங்க விதிமுறை பின்பற்றப்படவில்லை என்று விவரம் தெரிந்தவர்கள் கூறுகின்றனர்.
6 ஆண்டுகளாக கூட்டப்படாத பொதுக்குழு
ஆண்டுக்கு ஒருமுறை சங்கப் பொதுக்குழுவைக் கூட்டி, தணிக்கை செய்யப்பட்ட சங்கத்தின் வரவு-செலவு கணக்கிற்கு ஒப்புதல் பெற்று, அதனை முறைப்படி சங்கப் பதிவாளருக்கு சமர்ப்பிக்க வேண்டும். அதையடுத்து சங்கம் புதுப்பிக்கப்பட்டதற்கான பதிவாளர் ஆணையையும் பெற வேண்டும். சங்க விதிகளின்படி 2007-ம் ஆண்டுக்குப் பிறகு இன்றுவரை பொதுக்குழு கூட்டப்படவே இல்லை. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூட்டப்பட வேண்டிய செயற்குழுக் கூட்டமும் பல மாதங்களாக கூட்டப்படவில்லையாம்.
ஒரு நேரத்தில் ஒரு பணிக்கு ரூ.2.5 லட்சம் மற்றும் பல பணிகளுக்கு ரூ.5 லட்சத்திற்கும் அதிகமாக பணம் ஒதுக்க வேண்டியதிருந்தால் அந்த செலவு குறித்த விவரங்களை 3 மாதத்துக்குள் சங்க செயற்குழு அல்லது பொதுக்குழுவில் சமர்ப்பித்து ஒப்புதல் பெற வேண்டும் என்ற விதிமுறையும் மீறப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
சம்பள உயர்வில் விதிமீறல்
20-6-2012 அன்று நடந்த சங்கத்தின் 28-வது செயற்குழுக் கூட்டத்தில், நிர்வாகப் பணியாளர்களுக்கு 2009, 2010, 2011 ஆகிய 3 ஆண்டுகளுக்கான சம்பள உயர்வுக்கு ஒப்புதல் கோரப்பட்டது. இதுபோல சம்பள உயர்வு வழங்குவதற்கு முன்பே செயற்குழுவிடம் அனுமதி வாங்க வேண்டும் என்ற விதிமுறை பின்பற்றப்படவில்லை என்றும், சங்க விதியை மீறி, ஒப்பந்தப் பணியாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு போனஸ் கொடுத்திருக்கிறார்கள் என்றும் புகார் எழுந்துள்ளது. இத்தகைய பல்வேறு குற்றச்சாட்டுகள் மூலம் ரூ.50 கோடிக்கும் மேல் ஊழல் நடந்திருப்பதாக விவரம் தெரிந்தவர்கள் கூறுகின்றனர்.
புகார் மனுவுக்கு மழுப்பலான பதில்
இதுகுறித்து தகவல் ஆய்வாளர் கருப்பன் சித்தார்த்தன் கூறுகையில், சென்னை மாநகராட்சி எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு சங்கத்தில் 1998-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை 11 ஆண்டுகள் நடந்த முறைகேடுகள் குறித்து மேயர் சைதை துரைசாமியிடம் புகார் கொடுத்துள்ளேன். இதுதொடர்பாக சங்கத்தில் நான் அளித்த மனுவுக்கு, மழுப்பலான பதில்தான் வந்தது. எய்ட்ஸ் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பிரசாரத்திற்காக எந்தெந்த கலைக் குழுக்களுக்கும், எந்தெந்த தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கும் நிதியுதவி அளிக்கப்பட்டது என்பது தொடர்பான பதிவேடுகள் எங்களிடம் இல்லை என்று எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் கைவிரிக்கிறது. இச்சங்கத்தில், சுமார் ரூ.100 கோடி வரை ஊழல் நடந்திருப்பது விசாரணையின் முடிவில்தான் தெரியவரும் என்றார்.