தடை உத்தரவை தளர்த்தி உயர் நீதிமன்றம் உத்தரவு
அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை பத்திரப் பதிவு செய்ய ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை உத்தரவை உயர் நீதிமன்றம் தளர்த்தியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 20-ம் தேதிக்கு முன்பாக பத்திரப் பதிவு செய்யப்பட்ட வீட்டு மனைகளை மறு விற்பனை செய்யலாம் என அனுமதியளித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘‘தமிழகம் முழுவதும் விவசாய நிலங்கள் அனைத்தும் சட்ட விரோத வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு வரு கின்றன. இதனால், விவசாயமும், விவசாய நிலங்களும் முற்றிலுமாக அழிந்து வருகிறது. இந்த சட்ட விரோத விற்பனையை பத்திரப் பதிவுத்துறையும் ஊக்குவித்து வருகிறது. எனவே விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற தடை விதிக்க வேண்டும்’’ என கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தமிழகம் முழுவதும் அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை பத்திரப் பதிவு செய்ய தடை விதித்து கடந்தாண்டு செப்டம்பர் 9-ம் தேதி உத்தரவிட்டனர்.
இந்த தடை உத்தரவு எதிரொலி யாக தமிழக அரசு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு சட்ட திருத்தம் கொண்டு வந்து அரசாணை பிறப்பித்தது. அதில் ‘‘2016 அக்டோபர் 20-ம் தேதிக்கு முன்பு பத்திரப் பதிவு செய்யப்பட்ட அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை மறு விற்பனை செய்யலாம் என்றும், ஆனால் அந்த தேதிக்குப் பிறகு புதிதாக உருவாக்கப்பட்ட அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை எக்காரணம் கொண்டும் பத்திரப் பதிவு செய்யக் கூடாது’’ என்றும் உத்தரவிடப்பட்டது.
ஆனால் இந்த அரசாணையை நீதிபதிகள் ஏற்க மறுத்ததால் தமிழகம் முழுவதும் ரியல் எஸ்டேட் தொழில் கடுமையாக பாதிப் படைந்தது. இதனால் நிலங்களை வாங்கிய பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி ரியல் எஸ்டேட் அதிபர்கள், முகவர்கள் சார்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
ஆனால், அப்போதைய தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், ‘‘இந்த விஷயத்தில் தமிழக அரசு ஒருங்கிணைந்த அறிக்கையை தாக்கல் செய்யும் வரை தடையை நீக்க முடியாது’’ என உறுதியாக இருந்ததால் கடந்த 7 மாதங்களாக பத்திரப் பதிவு முடங்கியது.
இந்நிலையில், தலைமை நீதிபதியாக பதவி வகித்த எஸ்.கே.கவுல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணி மாறுதலாகி சென்றார். அதன்பிறகு இந்த வழக்கு விசாரணை பொறுப்பு தலைமை நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ் மற்றும் நீதிபதி ஆர்எம்டி. டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்து வருகிறது. நேற்று இந்த வழக்கு இதே அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரரான வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.முத்துக்குமாரசாமி மற்றும் ரியல் எஸ்டேட் தரப்பில் 10-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆஜராகி சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வாதிட்டனர்.
அனைத்து தரப்பு வாதங்களை யும் கேட்ட நீதிபதிகள் நேற்று பிறப்பித்த உத்தரவு விவரம் வருமாறு:
அங்கீகாரமற்ற விளை நிலங் களை வீட்டு மனைகளாக மாற்ற கடந்த செப்டம்பர் 9-ம் தேதி உயர் நீதிமன்றம் விதித்த தடையில் நாங்கள் சிறு மாற்றம் செய்கிறோம். அதன்படி, தமிழக அரசு பத்திரப் பதிவு சட்டப்பிரிவு 22(ஏ) - வில் கொண்டு வந்துள்ள சட்ட திருத்தங்களின்படி, கடந்த 2016 அக்டோபர் 20-ம் தேதிக்கு முன்பாக விற்பனை செய்யப்பட்ட அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை மறு விற்பனை செய்ய எந்த தடையும் இல்லை.
அதேநேரம், இந்த தேதிக்குப் பிறகு விற்பனை செய்யப்பட்ட அங்கீகாரமற்ற நிலங்களை எக்காரணம் கொண்டும் மறு விற்பனை செய்யக்கூடாது. அரசு புதிதாக வகுக்கும் கொள்கை முடிவைப் பொருத்தே அதுதொடர் பாக முடிவு செய்யப்படும். இந்த கொள்கை முடிவை வரும் ஏப்ரல் 11-ம் தேதிக்குள் அரசு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளி வைத்தனர்.
கடந்த 2016 அக்டோபர் 20-ம் தேதிக்கு முன்பாக விற்பனை செய்யப்பட்ட அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை மறு விற்பனை செய்ய எந்த தடையும் இல்லை. அதேநேரம், இந்த தேதிக்குப் பிறகு விற்பனை செய்யப்பட்ட அங்கீகாரமற்ற நிலங்களை எக்காரணம் கொண்டும் மறுவிற்பனை செய்யக்கூடாது.