தமிழகம்

சென்னை: ஆமை வேகத்தில் மூலக்கடை மேம்பாலப் பணி - நெரிசல், தூசியால் மக்கள் தவிப்பு

செய்திப்பிரிவு

மூலக்கடையில் மேம்பாலக் கட்டுமானப் பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இதனால், கடுமையான போக்குவரத்து நெரிசல், தூசி மற்றும் வாகன புகையால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

சென்னை துறைமுகத்துக்கு வெளி மாநிலங்களில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான கன்டெய்னர் லாரிகள், சரக்கு லாரிகள் வருகின்றன. லாரிகள் உள்பட அனைத்து வாகனங்களும் மூலக்கடை வழியாகத்தான் சென்னை நகருக்குள் நுழைகின்றன. மாதவரம், கொடுங்கையூர், மணலி பகுதிகளுக்குச் செல்லும் வாகனங்களும் மூலக்கடை சந்திப்பு வழியாகத்தான் செல்ல வேண்டியுள்ளது. இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.

இதைத் தவிர்க்க, மூலக்கடை சந்திப்பில் ரூ.49.55 கோடி செலவில் மேம்பாலம் கட்ட கடந்த திமுக ஆட்சியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. அப்போதைய நிதியமைச்சர் க.அன்பழகன், 2011-ம் ஆண்டு ஜனவரியில் மேம்பாலப் பணிக்கு அடிக்கல் நாட்டினார். மொத்தம் 614 மீட்டர் நீளத்தில் 4 வழிப்பாதையாக மேம்பாலம் அமைக்கப்படுகிறது. 18 மாதத்தில் பணி முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், திட்டக்காலம் முடிந்து, 16 மாதங்களுக்கு மேலாகியும் பணிகள் முடிக்கப்படவில்லை.

இதனால், கடும் போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்கித் தவிக்கின்றன. மாநகர பஸ்கள், இரு சக்கர வாகனங்கள், கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் நீண்டதொலைவுக்கு அணிவகுத்து நிற்கின்றன. மேலும் வாகனங்கள் செல்லும்போது புழுதி பறக்கிறது. அந்தப் பகுதி எப்போதும் புகை மண்டலமாகவே காட்சி அளிக்கிறது. இதனால், வாகனங்கள் வருவதுகூட தெரிவதில்லை. தூசி மற்றும் வாகனப் புகையால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

இதுதொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்தஅகஸ்டின்,பொன்மணி, எலிசபெத் ஆகியோர் கூறியதாவது:

இந்தச் சாலையில் எப்போது பார்த்தாலும் கடுமையான போக்குவரத்து நெரிசலாக இருக்கிறது. பாலம் அமைக்கும் பணி 3 ஆண்டுகளாக நடந்து வருகிறது. அடிக்கடி விபத்து நடப்பதால், இந்த சாலைக்கு வரவே பயமாக இருக்கிறது. பாதசாரிகள் ஒதுங்கி செல்லவும் இடமில்லை. வீடுகளில் தூசி படிகிறது. இதனால், ஆஸ்துமா நோய் பரவும் அபாயம் உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாதவரம் பகுதிச் செயலாளர் வி.ஆனந்தன் கூறுகையில், ‘‘பாலத்தைக் கட்டி முடிக்க அரசு முழுமையாக முனைப்பு காட்டவில்லை. இந்தப் பாலத்தை விரைவில் கட்டி முடிக்கக் கோரி, இப்பகுதி பொதுமக்கள் நலச்சங்கங்கள், வியாபாரிகள் நல சங்கம் உட்பட அனைத்து சங்கங்களையும் திரட்டி வரும் ஜனவரியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம்’’ என்றார்.

2014 டிசம்பரில் முடியும்

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரியிடம் கேட்டபோது, ‘‘நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. பின்னர், ஒப்பந்ததாரர்கள் தேர்வு செய்வதிலும் பிரச்சினை ஏற்பட்டது. இப்போது, ஓரளவுக்கு பிரச்சினை முடிந்துள்ளது. எனவே, பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளோம். 2014 டிசம்பருக்குள் பாலம் கட்டி முடிக்கப்படும்’’ என்றார்.

SCROLL FOR NEXT