தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுவதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் துறை உயர் அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் பி.ராமமோகன ராவ் ஆலோசனை நடத்தினார்.
காவிரி நீர் பங்கீட்டு பிரச்சினையை தொடர்ந்து கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக நடந்த வன்முறைகளைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்புப் போராட்டத்துக்கு விவசாய சங்கங்களும், வணிகர் சங்கங்களும் அழைப்பு விடுத்துள்ளன. இதற்கு திமுக, காங்கிரஸ், பாஜக, பாமக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
இதனால் கடைகள், வணிக நிறுவனங்கள், பெட்ரோல் பங்க்கள், நகைக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்டோக்களும் ஓடாது என தொழிலாளர் சங்கங்கள் அறிவித்துள்ளன. இதனால் மாநிலம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக நேற்று மாலை 6 மணிக்கு தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தலைமைச் செயலாளர் பி.ராமமோகன ராவ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் உள்துறை செயலாளர் அபூர்வ வர்மா, டிஜிபி [பொறுப்பு] டி.கே.ராஜேந்திரன், கூடுதல் டிஜிபி திரிபாதி, சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ், நுண்ணறிவுப் பிரிவு ஐஜி சத்தியமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.
சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் முழு அடைப்பு போராட்டத்தின் போது செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
மத்திய அரசு நிறுவனங்கள், அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், அரசுkf பேருந்து களுக்கு பாதுகாப்பு அளிப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.