தமிழகம்

ரூ.13.43 கோடியில் நெல்லுக்கு இ-கொள்முதல் திட்டம்: சட்டப்பேரவையில் ஜெயலலிதா புதிய அறிவிப்புகள்

செய்திப்பிரிவு

நெல் கொள்முதல் முறையில் உள்ள குறைபாடுகளை களைய நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மின்னணு கொள்முதல் திட்டம் (E Procurement) செயல்படுத்தப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று (வெள்ளிக்கிழமை) கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பாக விதி எண் 110-ன் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்த முதல்வர் ஜெயலலிதா, விவசாயிகள் நலனுக்காக 9 அறிவிப்புகளை வெளியிட்டார்.

110 அறிக்கையின் கீழ் அவர் கூறியதாவது:

அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பு அளித்திடும் வகையில் விலையில்லா அரிசி வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு முன்னோடித் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. உணவுப் பாதுகாப்பின் அங்கங்களாக உள்ள உற்பத்தி, சேமிப்பு, விற்பனை ஆகியவற்றில் ஈடுபட்டு வரும் நுகர்பொருள் வாணிபக் கழகம், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனம், கூட்டுறவுத் துறை ஆகியவற்றின் செயலாக்கத்தை மேம்படுத்தும் வகையில் புதிய கிடங்குகள் கட்டுதல், கொள்முதல் நிலையங்கள் ஏற்படுத்துதல், நவீன அரிசி ஆலைகளை அமைத்தல் போன்ற பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

கீழ்க்கண்ட அறிவிப்புகளை இம்மாமன்றத்தில் அறிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

மின்னணு நெல் கொள்முதல் திட்டம்:

தமிழ்நாட்டில் 2015-16ஆம் ஆண்டில் 20.38 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு 86.98 லட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. பரவலாக்கப்பட்ட கொள்முதல் திட்டத்தின் கீழ் தேவைக்கேற்ப நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 16.83 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், தேவையான கண்காணிப்பு வழிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டாலும், அமைப்பு முறை குறைபாடு காரணமாக விவசாயிகளுக்கு சில இடர்ப்பாடுகள் ஏற்படுகின்றன.

நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது என்றும், கொள்முதலின் போது, விவசாயிகளின் நெல் எடை குறைவாக கணக்கிடப்படுகிறது என்றும், கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான தொகை தாமதமாக வழங்கப்படுகிறது என்றும், விவசாயிகளுக்கு முழுப் பணமும் வழங்கப் பெறுவதில்லை என்றும், பல்வேறு குறைபாடுகள் அவ்வப்போது தெரிவிக்கப்படுகின்றன.

நெல் கொள்முதல் பணிகள் கணினிமயமாக்கப்படாததால் அரசால் அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், மின்னணு தீர்வு சேவை வழியாக விவசாயிகளுக்கு பணம் வழங்குவது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளது.

தற்போதுள்ள நடைமுறையில், கொள்முதல் செய்யப்படும் நெல் பற்றிய விவரங்கள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் பெறப்பட்டு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் அலுவலகங்களில் தொகுக்கப்படுகின்றன. பிறகு, நிதி வெளியீடு தொடர்பான செயல்முறை ஆணை வெளியிடப்பட்டு, மின்னணு தீர்வு சேவை மூலம் பணம் வழங்குவதற்காக, கருவூலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. எனவே, பணப் பட்டுவாடா செய்வதில் காலதாமதம் ஆவதால், நேரடி பணப் பட்டுவாடா செய்யவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

இது போன்ற குறைபாடுகளை முழுவதும் களைந்து, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் சிறந்த பயனைப் பெறும் வகையில் தமிழ்நாட்டில் மின்னணு கொள்முதல் திட்டம் செயல்படுத்தப்படும்.

நெல் கொள்முதல் விபரம் முழுவதுமாக கணினிமயமாக்கப்படும். இதற்கென நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உரிய கட்டமைப்பு வசதிகளான மின்னணு விற்பனை இயந்திரம் கணினி , மற்றும் மின்னணு எடை இயந்திரம் ஆகியன வழங்கப்படும். இதனால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் செயலாக்கத் திறன் மேம்படுத்தப்படும்.

விவசாயிகள் தங்களது பெயர், நில விபரம், பயிர் சாகுபடி பரப்பு, அறுவடையாகும் உத்தேச காலம், கைபேசி எண் ஆகிய விபரங்களை இணைய தளம் மூலமாகவோ, பொது சேவை மையங்கள் மூலமாகவோ பதிவு செய்துகொள்ளலாம். இந்த நடைமுறையினால் விவசாயிகளுக்கு முன்கூட்டியே குறுஞ்செய்தி மூலமாக நெல் கொண்டு வரவேண்டிய நாள் மற்றும் நேரம் தெரிவிக்கப்படும். எனவே, விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையங்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் எழாது.

அவ்வாறு விவசாயிகள் நெல் கொண்டு வரும் சமயம் நெல் எடை போடப்பட்டு, எடை விவரம், நெல்லுக்கான தொகை, நெல் நகர்வு மற்றும் நெல் சேமிப்புக் கிடங்கு ஆகிய தகவல்கள் எந்த நேரத்திலும் விவசாயிகளும் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் வண்ணம் ஒளிவு மறைவற்ற நிலையில் இணைய தளத்தில் வெளியிடப்படும்.

விவசாயிகளின் நிலத்திலிருந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கு வரையிலான கொள்முதல் பணி மற்றும் நெல் நகர்வு செய்கின்ற பணி முழுவதும் கணினிமயமாக்கப்பட்டு, மின்னணு கொள்முதல் ந-யீசடிஉரசநஅநவே செய்யப்படுவதால் விவசாயிகள் தங்களது வசதிக்கேற்ற நாள் மற்றும் நேரத்தினை தெரிந்தெடுத்து நெல்லினை நேரடி நெல் கொள்முதல் நிலையம் கொண்டு வருவதற்கு உரிய நடைமுறை ஏற்படுத்தப்படும்.

நெல் கொள்முதல் செய்தவுடன் எடை, தொகை முதலிய விவரங்கள் அடங்கிய ரசீதும் விவசாயிகளுக்கு வழங்கப்படும். விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நெல்லிற்குண்டான தொகை முழுவதும் அவர்களது வங்கி கணக்கில் மின்னணு தீர்வு சேவை வழியாக உடனடியாக வரவு வைக்கப்படும்.

இந்த மின்னணு நெல் கொள்முதல் திட்டம் நடப்பாண்டில் 13 கோடியே 43 லட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.

திருவாரூரில் நவீன அரிசி ஆலை:

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் 21 நவீன அரிசி ஆலைளை நடத்தி வருகிறது. இதன் மூலம் வருடத்திற்கு 3.10 லட்சம் மெட்ரிக் டன் நெல் அரவை செய்யப்படுகிறது. இது தவிர, 422 தனியார் நவீன அரிசி ஆலைகள் மூலம் 14 லட்சம் மெட்ரிக் டன் நெல் வருடந்தோறும் அரவை செய்யப்படுகிறது. பொது விநியோகத் திட்டத்தின் அரிசி தேவையினை கருத்தில்கொண்டு கூடுதல் நவீன அரிசி ஆலைகள் அமைப்பது அவசியமாகிறது.

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டத்தில் நெல் அறுவடை செய்யும் காலங்களில் 56 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 64,000 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தற்போது 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக சுந்தரக்கோட்டை நவீன அரிசி ஆலை மற்றும் திருவாரூர் மண்டல அரவை முகவர்களின் நவீன அரிசி ஆலைகள் மூலம் நெல் அரவை செய்யப்படுகிறது.

இதனால் அரிசியினை உற்பத்தி செய்து பொது விநியோகத் திட்டத்திற்கு வழங்குவதில் காலதாமதமும், போக்குவரத்து செலவினமும் ஏற்படுகின்றன. எனவே, திருவாருர் பகுதியில் ஒருங்கிணைந்த நவீன அரிசி ஆலை கட்டுவதன் மூலம் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லினை அந்தப் பகுதியிலேயே உடனுக்குடன் அரவை செய்து அரிசியினை பொது விநியோகத் திட்டத்திற்கு வழங்க இயலும். எனவே, திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்தில் தமிழகத்திலேயே முன்னோடியாக வருடத்திற்கு 30,000 மெட்ரிக் டன் நெல் அரவைத் திறனுள்ள ஒருங்கிணைந்த நவீன அரிசி ஆலை 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும். ஒருங்கிணைந்த நவீன அரிசி ஆலையில் நெல் அரவை செய்யப்படும் போது கிடைக்கப் பெறும் தவிடு, உமி போன்ற உப பொருட்கள் மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றிட நடவடிக்கை எடுக்கப்படும்.

திருவாரூரில் இரண்டு சேமிப்புக் கிடங்குகள்

உணவுப் பாதுகாப்பின் அங்கங்களான சேமிப்பு, விற்பனை ஆகியவற்றில் முக்கிய பங்காற்றி வரும் சேமிப்புக் கிடங்குகளை அதிகரித்து உணவு தானியங்களை முறையாக சேமித்து வைக்கும் வகையில், கடந்த 5 ஆண்டுகளில் 739 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6.88 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 165 சேமிப்புக் கிடங்குகள் அமைக்க ஆணையிடப்பட்டு, 2.49 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 106 கிடங்குகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 4.39 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்கு பணிகள் நடைப்பெற்று வருகின்றன.

சேமிப்பு கொள்ளளவை அதிகரிக்கும் வகையில் கூடுதல் கிடங்குகள் அமைப்பதற்கு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. எனவே, தலா 10,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட இரண்டு கிடங்குகள் திருவாரூர் மாவட்டத்தில் கோட்டூர் மற்றும் நீடாமங்கலம் பகுதிகளில் கட்டப்படும். சுமை தூக்கும் பணியாளர்களின் வேலைப் பளுவை இலகுவாக்கும் பொருட்டு தானியங்கி இழுவை இயந்திரங்கள், சுமையினை ஏற்றி, இறக்கி அட்டியிடும் இயந்திரங்கள் மற்றும் மூட்டைகளை லாரிக்கு கொண்டு செல்லும் இயந்திரங்கள் ஆகியவை இந்த கிடங்குகளில் நிறுவப்படும். இந்த கிடங்குகள் 40 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்.

தஞ்சை, திருவாரூரில் நெல் கொள்கலன்கள்:

விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்மணிகளைப் பாதுகாக்க திறந்தவெளி சேமிப்புக் கிடங்குகளே அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. வெயில், மழை ஆகியவற்றின் காரணமாக திறந்தவெளி சேமிப்பு நிலையங்களில் சேமிக்கப்படும் நெல் பாதிப்படைகிறது. எனவே, நவீன தொழில்நுட்ப வசதி கொண்டதும், நீண்டகால நெல் சேமிப்புக்கு பாதுகாப்பான நெல் கொள்கலன், அமைத்திட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டம் எருக்கூர் நவீன அரிசி ஆலை கிடங்கு வளாகத்தில் 58 கோடியே 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 50,000 மெட்ரிக் டன் கொள்ளளவில் நெல் கொள்கலன் நிறுவும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் நவீன தொழில்நுட்ப வசதி கொண்ட நெல் கொள்கலன்கள் கட்டப்படும்.

இவை ஒவ்வொன்றும் 15,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்டதாக இருக்கும். இவை 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும்.

ரூ.18 கோடி செலவில் 5 சேமிப்புக் கிடங்குகள்:

தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம் மாநிலம் முழுவதும் 55 இடங்களில் 255 சேமிப்புக் கிடங்குகளைக் கொண்டு இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் மொத்தக் கொள்ளளவு 6.74 லட்சம் மெட்ரிக் டன் ஆகும். விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு விஞ்ஞான ரீதியிலான சேமிப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து விளை பொருட்களின் சேமிப்பு இழப்பினைத் தடுப்பதே இந்நிறுவனத்தின் முக்கிய குறிக்கோளாகும்.

கடந்த 5 ஆண்டுகளில் 45,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 2 கிடங்குகள் 41 கோடியே 14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேலும், 65 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 62,000 மெட்ரிக் டன் கொள்ளளவில் 14 சேமிப்புக் கிடங்குகள் கட்டப்பட்டு வருகின்றன.

விவசாயப் பெருமக்கள், வணிகர்கள் மற்றும் இந்திய உணவுக் கழகம் ஆகியோரின் பயன்பாட்டிற்கென கூடுதலாக மொத்தம் 16,600 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 5 சேமிப்புக் கிடங்குகள் 18 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நபார்டு வங்கிக் கடன் உதவியுடன் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம், வேலூர் மாவட்டம், அரக்கோணம், நாமக்கல் மாவட்டம், நாமக்கல், சிவகங்கை மாவட்டம், மானாமதுரை மற்றும் கடலூர் மாவட்டம், கடலூர் ஆகிய இடங்களில் நடப்பு நிதியாண்டில் கட்டப்படும்.

இதன் மூலம், இந்தப் பகுதிகளில் உள்ள விவசாயப் பெருமக்கள், தனியார் சரக்கு வைப்பாளர்கள், இந்திய உணவுக் கழகம், தனியார் சர்க்கரை ஆலைகள், சிமெண்ட் மற்றும் உர உற்பத்தி நிறுவனங்கள் ஆகியோர் பயன்பெறுவர்.

50 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு புதிய கட்டிடங்கள்:

காவேரிப் பாசனப் பகுதிகளில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வாயிலாக கொள்முதல் செய்யப்படுகிறது. பிற மாவட்டங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தவிர கூட்டுறவு நிறுவனங்களும் விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்கின்றன. விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லினை கொள்முதல் செய்வதில் நேரடி கொள்முதல் நிலையங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன.

வாடகைக் கட்டடங்களில் இயங்கி வரும் நெல் கொள்முதல் நிலையங்களில் போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததை கருத்தில் கொண்டு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு சொந்தக் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. 260 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு 50 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு புதிய கட்டிடங்கள் 20 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும்.

11 கூட்டுறவு வங்கிகளுக்கு புதிய கட்டடங்கள்:

தமிழ்நாட்டில் உள்ள 4,480 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் 3,961 சங்கங்கள் சொந்தக் கட்டடங்களில் செயல்படுகின்றன. 519 சங்கங்கள் வாடகைக் கட்டடடங்களில் செயல்படுகின்றன. அனைத்து தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களும் சொந்தக் கட்டடங்களில் செயல்பட வேண்டும் என்ற நோக்கில் 100 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்குச் சொந்தக் கட்டடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாண்டு மேலும் 90 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கு சொந்தக் கட்டடங்கள் கட்டப்படும். இதற்காக, தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் பராமரிக்கப்படும் கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதியிலிருந்து 18 கோடி ரூபாய் வட்டியில்லாக் கடனாக வழங்கப்படும்.

கிராமப்புற மக்களுக்குச் சேவை செய்திடும் மற்றொரு கூட்டுறவு அமைப்பான தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள் இரண்டிற்கு தொடக்க வங்கி வளர்ச்சி நிதியுதவியுடன் 40 லட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டடங்கள் கட்டப்படும்.

மத்திய கூட்டுறவு வங்கிகளின் 9 கிளைகள் மற்றும் நகரக் கூட்டுறவு வங்கிகளின் 2 கிளைகள் என 11 கூட்டுறவு வங்கிகளுக்கு புதிய கட்டடங்கள் 9 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படும். இவை பாதுகாப்புக் கதவுடன் கூடிய பாதுகாப்பு அறைகள், குளிர்சாதன வசதி, மின்னியற்றி, சூரிய ஒளி வாங்கிகள் ளுடிடயச ஞயநேடள போன்ற அதி நவீன உட்கட்டமைப்பு வசதிகளை உள்ளடக்கியதாக இருக்கும்.

79 கூட்டுறவுச் சங்கங்கள் நவீனப்படுத்தப்படும்:

கூட்டுறவு வங்கிகள் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இருக்க வேண்டும் என்ற அடிப்படையிலும், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வங்கிச் சேவைகள் வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலும், வங்கிக் கிளைகள் நவீனமயமாக்கப்படுகின்றன. டிஜிட்டல் விளம்பரப் பலகைகள், நவீன இருக்கை வசதி, வாடிக்கையாளர் காத்திருப்பு பகுதி, நவீன கவுன்ட்டர்கள், கணினி வசதி மற்றும் குளிர்சாதன வசதி போன்ற சிறப்பான உட்கட்டமைப்பு வசதிகள், கண்காணிப்பு நிழற்பட கருவி, பாதுகாப்பு கதவுடன் கூடிய பாதுகாப்பு அறை, நகைப் பெட்டகங்கள், வாடிக்கையாளர் பாதுகாப்பு பெட்டகம், அபாய எச்சரிக்கை ஒலிப்பான் போன்ற பாதுகாப்பு வசதிகள் ஆகிய வசதிகளுடன் மத்தியக் கூட்டுறவு வங்கிகளின் 231 கிளைகள், நகரக் கூட்டுறவு வங்கிகளின் 67 கிளைகள், 129 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மற்றும் 19 நகரக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் கடந்த 5 ஆண்டுகளில் நவீனமயம் ஆக்கப்பட்டன.

நடப்பு நிதி ஆண்டில் மத்தியக் கூட்டுறவு வங்கிகளின் 10 கிளைகள், நகரக் கூட்டுறவு வங்கிகளின் 2 கிளைகள், 65 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், 1 நகரக் கூட்டுறவுக் கடன் சங்கம் மற்றும் 1 தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி என மொத்தம் 79 கூட்டுறவுச் சங்கங்கள் 12 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பில் நவீனப்படுத்தப்படும். இதன் மூலம் கூட்டுறவுச் சங்கங்கள் சிறப்பான சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்க இயலும்

.

சாத்தூர், நாகர்கோவில் கூட்டுறவு மேலாண்மை நிலையங்களுக்கு சொந்தக் கட்டடம்:

1927ஆம் ஆண்டில் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட தஞ்சாவூர் சாமியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையம் உட்பட 20 கூட்டுறவு மேலாண்மை நிலையங்கள் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் அங்கங்களாக செயல்பட்டு வருகின்றன. இம்மேலாண்மை நிலையங்கள் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி, நகை மதிப்பீட்டாளர் பயிற்சி, கணினி தொடர்பான பல்வேறு வகையான பயிற்சிகள், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்புகள் போன்றவற்றைக் கூட்டுறவுச் சங்கங்களின் பணியாளர்களுக்கு வழங்கி வருகிறது. இப்பயிற்சி நிலையங்களில் கூட்டுறவுச் சங்கங்களின் செயலாளர்கள், எழுத்தர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கும், பொது விநியோகத் திட்ட அங்காடிகளின் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்களுக்கும் குறுகிய காலப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஆண்டுதோறும் சுமார் பத்தாயிரம் பணியாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த 20 கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில், 10 கூட்டுறவு மேலாண்மை நிலையங்கள் சொந்த கட்டடத்தில் இயங்கி வருகின்றன. வாடகைக் கட்டடங்களில் இயங்கி வரும் மேலாண்மை நிலையங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் அவைகளுக்கு படிப்படியாக சொந்தக் கட்டடங்கள் கட்டப்படும். முதல் கட்டமாக விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தியாகி சங்கரலிங்கனார் கூட்டுறவு மேலாண்மை நிலையத்திற்கு சொந்த கட்டடம் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டிலும், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கூட்டுறவு மேலாண்மை நிலையத்திற்கு சொந்த கட்டடம் 1 கோடியே 60 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டிலும் இந்த ஆண்டு கட்டப்படும்.

தற்போது நான் வெளியிட்ட இந்த அறிவிப்புகளின் காரணமாக விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த நெல்லை நேரடி கொள்முதல் நிலையங்களில் எவ்வித சிரமமும் இன்றி விற்பனை செய்திட இயலும். புதிய நவீன அரிசி ஆலைகள், கிடங்குகள் ஆகியவை அமைக்கப்படுவதனால், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசியின் தரத்தை மேலும் உறுதி செய்ய இயலும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT