தமிழகம்

நெல்லை: முறிந்த வாழைக்கு ரூ. 3 மட்டுமே நிவாரணம்: மனம் முறியும் வாழை விவசாயிகள்

செய்திப்பிரிவு

`திருநெல்வேலி மாவட்டத்தில் சூறைக் காற்றில் சேதமடைந்த வாழை மரங்களுக்கு ரூ. 3 மட்டுமே நிவாரணம் வழங்கப்படும்’ என, அரசு அறிவித்திருப்பது, வாழை விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சூறைக் காற்றில் சேதமடைந்த வாழைகளுக்கு நிவாரணம் அளிப்பது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 14.4.13 மற்றும் 15.4.13-ம் தேதிகளில் வீசிய சூறாவளிக் காற்றால், திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம் மற்றும் நாங்குநேரி வட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்களில் 50 சதவிகிதத்துக்கு மேல் பாதிக்கப்பட்டது.

ரூ. 23 லட்சம்

இப்பகுதியைச் சேர்ந்த 1,364 விவசாயிகளுக்கு, ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ. 7,500 வீதம், மொத்தம் 311.14 ஹெக்டேரில் பாதிக்கப்பட்ட வாழை மரங்களுக்கு ரூ. 23.33 லட்சம் நிவாரணத் தொகை வழங்க தமிழக அரசு அனுமதித்து ஆணையிட்டுள்ளது.

இந்த நிவாரணத் தொகை திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் வைப்பீடு செய்யப்பட்டு, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமாக, பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படவுள்ளது. வங்கிக் கணக்கு இல்லாத விவசாயிகள், அருகிலுள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியின் செயலரைத் தொடர்பு கொண்டு கணக்கு ஆரம்பிக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பட்டியல், நிவாரணத் தொகை விவரம் அடங்கிய பட்டியல் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர், சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகம், சம்பந்தப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் பட்டியலைப் பார்வையிட்டு, நிவாரணத் தொகை விவரங்களை அறிந்து கொள்ளலாம். தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படும் நிவாரணத் தொகையைப் பெற, விவசாயிகள் தங்களது புகைப்படத்துடன் இருப்பிட ஆதாரம் மற்றும் சாட்சிகளுடன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலர் முன் ஆஜராகி, பதிவேட்டில் புகைப்படத்தை ஒட்டி கையொப்பமிட வேண்டும். புதிய வங்கிக் கணக்கு தொடங்க எவ்வித முன்வைப்பு தொகையும் செலுத்த தேவையில்லை. விவசாயிகள் நிவாரணத் தொகை முழுவதையும் வங்கியிலிருந்து எடுத்துக் கொள்ளலாம் என்று, ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் அதிருப்தி

“சேதமடைந்த வாழைகளுக்கு அரசு அறிவித்துள்ள தொகை யானைப் பசிக்கு சோளப்பொரி போன்றுகூட இல்லை. ஒரு வாழையின் உற்பத்தி செலவு ரூ. 200 வரை உள்ளது. வாழைத்தார்கள் ரூ. 250 முதல் ரூ. 300 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், தற்போது பாதிக்கப்பட்ட ஒரு வாழைக்கு ரூ.3 மட்டுமே நிவாரணத் தொகையாக கணக்கிட்டு அளிக்கப்படுவது வேதனை அளிக்கிறது” என்கிறார், திருக்குறுங்குடி பகுதி வாழை விவசாயி பி.பெரும்படையார்.

`விவசாயிகளுக்கு ஏதோ நிவாரணம் அளிப்பதுபோல் கூறிவிட்டு, எதையுமே மத்திய, மாநில அரசுகள் செய்யாமல் உள்ளன’ என்றும், அவர் குற்றஞ்சாட்டினார்.

கன்று விலையே ரூ. 5

களக்காடு பகுதி வாழை விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் எஸ்.ஐயம்பெருமாள் கூறியதாவது: கடந்த ஆண்டு குறிப்பிட்ட இரு நாள்களில் வீசிய சூறைக்காற்றால், மாவட்டம் முழுக்க 4 லட்சம் வாழைகள் சேதமடைந்திருந்தன. சேதமடைந்த வாழை ஒன்றுக்கு ரூ. 75 வழங்க வேண்டும் என, அரசிடம் கோரிக்கை வைத்திருந்தோம். 311.14 ஹெக்டேரில் 50 சதவிகிதத்துக்கு மேல் வாழைகள் சேதமடைந்ததை கணக்கிட்டு, இப்போது ஒரு வாழைக்கு ரூ. 3 என்று நிவாரணம் கணக்கிட்டிருக்கிறார்கள்.

சூறைக் காற்றால் ஏற்பட்ட சேதத்தை பேரிடர் நிவாரணத்தில் சேர்க்கவில்லை. கடந்த 2011-ம் ஆண்டில் சூறைக் காற்றால் வாழைகள் சேதமடைந்திருந்தபோதும் இவ்வாறுதான் நிவாரணத் தொகையை வழங்கினர். இப்படி ஒரு குறைந்த தொகையை வழங்கியிருக்கவே வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகத்திடம் அப்போது தெரிவித்திருந்தோம்.

ஒரு வாழைக் கன்று கூட ரூ. 5-க்கு விற்கப்படும் நிலையில், சேதமடைந்த குலை தள்ளிய வாழை மரம் ஒன்றுக்கு ரூ. 3 நிவாரணம் அறிவித்திருப்பது எந்த வகையில் நியாயம்?” என்று கேள்வி எழுப்பினார் அவர்.

SCROLL FOR NEXT