தமிழகம்

சென்னையில் குண்டடிபட்ட சிறுவனின் உடல்நிலையில் முன்னேற்றம்- தமிழக அரசு உதவியை எதிர்பார்க்கிறது குடும்பம்

கி.ஜெயப்பிரகாஷ்

சென்னை நீலாங்கரை அருகே காவல் நிலையத்தில் துப்பாக்கி வெடித்து குண்டு காயமடைந்த சிறுவன் தமீம் அன்சாரியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. குடும்பத்தை காப்பாற்றும் வகையில் தமிழக அரசு நிதி உதவி செய்ய வேண்டும் என சிறுவனின் தாய் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையை அடுத்த வெட்டுவாங்கேணியில் உள்ள கோயில் ஒன்றில் உண்டியல் உடைக்கப்பட்டது தொடர்பாக நீலாங்கரை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் விசாரணை நடத்தினார்.

சந்தேகத்தின் பேரில் அப்பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் தமீம் அன்சாரியை அழைத்துச் சென்று விசாரித்தார்.

விசாரணையின்போது, சிறுவனின் வாயில் துப்பாக்கியை வைத்து இன்ஸ்பெக்டர் மிரட்டியதாக கூறப்படுகிறது. திடீரென விசையில் விரல்பட்டு, துப்பாக்கி வெடித்ததில் சிறுவனின் தொண்டையில் குண்டு பாய்ந்தது.

ரத்த வெள்ளத்தில் அவன் மயங்கி விழுந்தான். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் கட்சிகளும், மனித உரிமை ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்தனர்.

தற்போது சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுவன் சிகிச்சை பெற்று வருகிறான். சிறுவன் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிதி வழங்கவும், சிறுவனுக்கான மருத்துவச் செலவை தமிழக அரசே ஏற்கும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றமும், பிப்ரவரி 12-ம் தேதி வரை சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் சிறுவனை பார்க்க, அவனது முக்கியமான உறவினர்களைத் தவிர மற்ற யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. 24 மணி நேரமும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ‘தி இந்து’விடம் சிறுவன் தமீம் அன்சாரி தயங்கியபடி கூறியதாவது:

போலீஸ் ஸ்டேஷனில் என் கைகளை சங்கலியால் கட்டினர். பின்னர், இன்ஸ்பெக்டர் என் வாயில் துப்பாக்கியை வைத்து மிரட்டினார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. பயமாக இருந்தது. திடீரென ஏதோ வெடிப்பதுபோல கேட்டது. அதன்பிறகு, என்ன நடந்தது என்றே தெரியவில்லை. கண் விழித்து பார்த்தபோது மருத்துவமனையில் இருந்தேன்.

எனக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடலில் பிரச்சினை இல்லை. ஆனால், கழுத்தின் பின்பகுதியில் வலி இருக்கிறது. ஏற்கெனவே கஷ்டப்பட்டு வந்த எங்களது குடும்பம், இப்போது என்னால் மேலும் பல கஷ்டங்களை அனுபவிக்கிறது. 7-வது வரை மட்டுமே படித்தேன். பின்னர் குடும்ப கஷ்டத்தால் வேலைக்கு சென்றுவிட்டேன். 10-ம் வகுப்பு

தேர்வு எழுதி, அரசு டிரைவராக பணியாற்ற வேண்டும் என்பதே என் விருப்பம்.

இவ்வாறு தமீம் அன்சாரி கூறினான்.

சிறுவனின் தாய் சபீனாபேகம் கூறும்போது, ‘‘ஐ.சி.யூ.வில் இருக்கும்போதே, ‘உங்கள் பையனுக்கு உடல்நிலை சரியாகி விட்டது. வீட்டுக்கு செல்லுங்கள்’ என போலீஸார் கூறினர். நல்லவேளையாக அரசும் நீதிமன்றமும் எடுத்த நடவடிக்கைகளால் என் பையன் நலமாக சிகிச்சை பெற்று வருகிறான். இதற்காக தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வறுமையில் வாழ்ந்து வரும் எங்களுக்கு தமிழக அரசு நிதி உதவி செய்தால் நன்றாக இருக்கும்’’ என்றார்.

சிறுவனின் மாமா அப்துல் ரஜாக் கூறும்போது, ‘இந்த சம்பவத்துக்கு காரணமான போலீஸ் அதிகாரியை பணிநீக்கம் செய்ய வேண்டும். சிறுவனின் தந்தை 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

அவனது அம்மாதான் வீட்டு வேலை செய்து 2 மகன்களையும், ஒரு மகளையும் காப்பாற்றி வருகிறார். அந்தக் குடும்பத்துக்கு உதவ தமிழக அரசு முன்வர வேண்டும்’’ என்றார்.

SCROLL FOR NEXT