தமிழகத்தில் 4 இடங்களில் 100 படுக்கைகள் கொண்ட இஎஸ்ஐ மருத்துவமனைகள் திறக்கப்படும் என்று மத்திய தொழிலாளர் துறை இணையமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்துள்ளார்.
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை சார்பில் தென்மாநில அளவிலான தொழிலாளர் துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற மாநாடு சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டை மத்திய இணையமைச்சர்பண்டாரு தத்தாத்ரேயா தொடங்கி வைத்தார். மாநாட்டின் முடிவில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் தலா ரூ.95 கோடி மதிப்பில், பெரும்புதூர், திருப்பூர், தூத்துக்குடி, கன்னியா குமரி ஆகிய பகுதிகளில் 100 படுக்கைகள் கொண்ட இஎஸ்ஐ மருத்துவமனைகள் திறக்கப்படும். மேலும் தாம்பரம், திண்டுக்கல், ராணிப்பேட்டை, ஆம்பூர், கோவில் பட்டி, விருதுநகர், ராஜபாளையம் ஆகிய பகுதிகளில் 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகள் திறக்கப்படும். இவை அனைத்தும் அடுத்த 2 ஆண்டுகளுக்குள் செயல்பாட்டுக்கு வரும்.
பண மதிப்பு நீக்கத்துக்கு பிறகு, மாநில அரசுடன் இணைந்து நாடு முழுவதும், தொழிலாளர் அதிகம் உள்ள பகுதிகளில் ஒரு லட்சத்து 39 ஆயிரம் முகாம்கள் நடத்தப்பட்டு, 43 லட்சத்து 60 தொழிலாளர்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநாட்டில் மத்திய தொழிலா ளர் துறை செயலர் எம்.சத்யவதி, தமிழக தொழிலாளர் துறை அமைச்சர் நீலோபர் கபில், ஆந்திர அமைச்சர் அட்சன் நாயுடு, தெலங்கானா அமைச்சர் நைனி நரசிம்மரெட்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.