கரூரில் நண்பர்களுடன் விளையாடியபோது 2 சுவர்களுக்கு இடையே சிக்கிக் கொண்ட 8 வயது சிறுவனை, சுவரில் துளையிட்டு காயமின்றி தீயணைப்புப் படையினர் மீட்டனர்.
கரூர் அருகே ஆண்டாங்கோவில் கிழக்கு எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் இந்திராணி. கணவர் இறந்துவிட்டார். இவரது மகன் சந்தோஷ்(8), அந்தப் பகுதியில் உள்ள சிறுவர்களுடன் நேற்று கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது, அருகே இருந்த 2 வீடுகளுக்கு இடையேயான சந்தில் ஒளிந்துகொள்ளச் சென்ற சந்தோஷ், சுவர்களுக்கு இடையே சிக்கிக் கொண்டார். அவரது அலறலைக் கேட்டு ஓடிவந்த அப்பகுதி மக்கள், சந்து மிகக் குறுகலாக இருந்ததால் சிறுவனை மீட்க முடியாமல் தவித்தனர்.
பின்னர், இதுகுறித்து கரூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு வந்த தீயணைப்பு நிலையத்தினர், சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சந்து மிகக் குறுகலாக இருந்ததால் வீட்டின் சுவரில் டிரில்லர் மூலம் துளையிட்டு, எந்தக் காயமுமின்றி சிறுவனை பத்திரமாக மீட்டனர். சுமார் 45 நிமிட போராட்டத்துக்குப் பிறகு சிறுவன் காயமின்றி மீட்கப்பட்டார். இதையடுத்து, அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.