மத்திய உள்துறை அமைச்சக எச்சரிக்கையின்படி மேற்குதொடர்ச்சி மலைக்காடுகளில் சிறப்பு அதிரடிப்படைக் காவலர்கள் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சகம் தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களுக்கு சமீபத்தில் ஒரு எச்சரிக்கை தகவலை அனுப்பியது. இந்த மூன்று மாநிலங்களும் இணையும் பகுதியில் உள்ள பரந்த வனப்பரப்பில் நக்சல்கள் காலூன்ற முயன்று வருகின்றனர். மேலும், ஆயுதம் தாங்கி போராடும் வகையில் பெரிய குழுக்கள், கொரில்லா பிரிவுகள் ஆகியவற்றை உருவாக்க அவர்கள் முயற்சிக்கின்றனர் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது. 3 மாநில எல்லையோர வனத்தை முழு கண்காணிப்பில் கொண்டுவராவிட்டால் இப்பகுதியில் மாவோயிஸ்ட் நக்சல்கள் இயக்கம் உயிர்பெறும் என்று அந்தத் தகவலில் எச்சரித்திருந்தது.
இதுகுறித்து ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டில் கடந்த 24-ம் தேதி ஒரு செய்தி வெளியாகி இருந்தது. இந்நிலையில் மத்திய அரசின் எச்சரிக்கையின்படி தமிழக காவல்துறை அதிரடியாக களமிறங்கியது. வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது தமிழக அரசால் சிறப்பு அதிரடிப்படை (எஸ்.டி.எப்) பிரிவு அமைக்கப்பட்டது. வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகும், காவல்துறையின் அந்த சிறப்புப்பிரிவு கலைக்கப்படவில்லை. மாறாக, வன ஊடுருவல் மற்றும் வலுவாக திட்டமிட்டு செயலில் இறங்கும் குழுக்களைத் தடுப்பது உள்ளிட்ட பணிகளில் அந்தப் பிரிவு ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.
சேலம் மாவட்டம் மேட்டூர், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில் முகாம் அமைத்து இந்த சிறப்பு அதிரடிப்படையினர் இயங்கி வருகின்றனர். குறிப்பிட்ட கால இடைவெளியிலும், தேவை ஏற்படும்போதும் இந்த படையினர் வனப்பகுதிகளில் அதிரடி ரெய்டில் ஈடுபவர்.
தற்போது மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வனத்துக்குள் எஸ்.டி.எப் பிரிவினர் அதிரடியாகக் களமிறக்கி விடப்பட்டுள்ளனர்.
வனத்துக்குள் சந்தேகப்படும் படியான ஆட்களின் நடமாட்டம், பொருட்களின் தடயங்கள், ஆயுத பயிற்சிக்கான சாத்தியங்கள் ஆகியவை குறித்து ஆய்வு செய்து வரும் பணி இவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியை அடுத்த அட்டப்பள்ளம் வனப்பகுதியில் இவர்கள் ரெய்டு செய்தனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கிராமவாசி மாதேஷ் என்பவர் வனப்பகுதிக்குள் வேட்டையில் ஈடுபட்டுள்ளார். காட்டுப்பூனையை வேட்டையாடி வனத்திலேயே தீமூட்டி சுடும் வேலையில் இருந்திருக்கிறார். அவரைச் சுற்றிவளைத்த எஸ்.டி.எப் குழு அவரிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்டுள்ளது. விசாரணையின்போது மாதேஷ், ‘‘எப்போதாவது சிறு விலங்குகளை வேட்டையாட காட்டுக்குள் வருவேன்” என்று கூறியிருக்கிறார். ஆனாலும், ‘காட்டுக்குள் சந்தேகத்துக்கு இடமான ஆட்கள் நடமாட்டம் அல்லது யாரும் தங்கியிருந்த அடையாளங்களை சமீபத்தில் பார்த்ததுண்டா?’ என்று அவரிடம் துருவித்துருவி விசாரித்துள்ளனர். அதன்பிறகு அவரை அஞ்செட்டி வனத்துறையினரிடம் ஒப்படைத் துள்ளனர். வனத்துறையினர் மாதேஷைக் கைது செய்ததுடன், அவரிடம் இருந்த நாட்டுத்துப்பாக் கியையும் பறிமுதல் செய்தனர். அதன்பிறகும் எஸ்.டி.எப் பிரிவினர் அந்தப் பகுதியில் கண்காணிப்புப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். எனவே உள்துறை அமைச்சகத்தின் எச்சரிக்கையால் விழித்துக் கொண்ட தமிழக காவல்துறை உடனடியாக களத்தில் இறங்கியிருப்பது, இதன்மூலம் உறுதியாகி உள்ளது.
இதேபோல மற்ற இரு மாநில காவல்துறையும் கண்காணிப்புப் பணியைத் துவங்கியுள்ளன என்று காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.