தமிழகம்

பாலமேட்டில் தடையை மீறி அவிழ்த்துவிடப்பட்ட காளைகள்: இளைஞர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதால் பதற்றம்

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை அருகே பிரசித்திபெற்ற பாலமேட்டு ஜல்லிக்கட்டு மைதானத்தில் தடையை மீறி காளைகள் நேற்று அவிழ்த்துவிடப்பட்டன. கூட்டத்தை நோக்கி சீறிப் பாய்ந்து வந்த காளைகளை அடக்க முயன்ற இளைஞர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி விரட்டியதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டுகள் உலகப் புகழ்பெற்றவை. அவனியாபுரத்தில் பொங்கல் அன்றும், அடுத்த நாள் பாலமேட்டிலும், மூன்றாம் நாள் அலங்காநல்லூரிலும் வழக்கமாக ஜல்லிக்கட்டு நடைபெறும். தமிழகம் முழுவதும் இருந்து ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், பார்வையாளர்கள், மாடுபிடி வீரர்கள், மாடு வளர்ப்போர் திரள்வர். இந்நிலையில், உச்ச நீதிமன்றத் தடையால் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக, இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்கப்படவில்லை.

இளைஞர்கள் போராட்டம்

இந்நிலையில், இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறும் கிராமங்கள் மட்டுமின்றி பிற இடங்களிலும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள், இளைஞர்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள் நடைபெற்றன. சென்னை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி போன்ற பெரு நகரங்களில் பல ஆயிரம் இளைஞர்கள் திரண்டு பேரணி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டன. அதனால், இந்த ஆண்டு உச்ச நீதிமன்ற தடையை மீறி ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்துவதற்கான எதிர்ப்பார்ப்பும், ஆர்வமும் தமிழகம் முழுவதும் காணப்பட்டது.

தீவிர கண்காணிப்பு

இதனிடையே உச்ச நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு நடைபெறும் கிராமங்களில் காளைகளை வளர்ப்போரிடம், மாடுகளை அவிழ்த்து விடமாட்டோம் என போலீஸார் எழுதி வாங்கினர். அவர்கள் வீடுகளையும் கண்காணித்து வந்தனர். இதனால், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

போலீஸாரின் இந்நடவடிக்கையை கண்டித்து கடந்த 2 நாட்களாக, அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்தில் வீடுகள், கடைகள் முன்பாக கருப்பு கொடிகளை ஏற்றியும், இளைஞர்கள் கருப்பு சட்டை அணிந்தும் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

பாலமேட்டில் பதற்றம்

பாலமேட்டில் நேற்று முன்தினத்தில் இருந்து நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். வாடிவாசலை சுற்றி தடுப்புகளை அமைத்து சீல் வைத்த போலீஸார், பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியும், சோதனைச் சாவடிகளை அமைத்தும், கேமரா பொருத்தப்பட்ட ஆளில்லா விமானங்களை பறக்கவிட்டும் தீவிரமாக கண்காணித்தனர்.

இந்நிலையில், பாலமேடு மஞ்சளாறு திடலில் உள்ள வாடிவாசல் கோயிலில் மாட்டுப்பொங்கல் பூஜைகள் நடத்தப்பட்டன. இதற்காக ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்போர், மாடுபிடி வீரர்கள், ஊர் பொதுமக்கள் வாடிவாசலுக்கு மாடுகளை அலங்கரித்து ஊர்வலமாக அழைத்து வந்தனர். மாடுகளின் கொம்புகள் மீது 100 ரூபாய் நோட்டுகளையும், பரிசுப்பொருட்களையும் கட்டி ஜல்லிக்கட்டுக்கு அழைத்து வருவது போலவே வந்தனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

வாடிவாசல் கோயிலில் பூஜை

இதனால், பொதுமக்களுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, மாட்டுப் பொங்கலையொட்டி மாடுகளுக்கு பொங்கல் வைத்து மரியாதை செலுத்தி பூஜை செய்வதற்கே அழைத்து செல்கிறோம் என்று மாடு வளர்ப்போர் தெரிவித்தனர். இதையடுத்து மாடுகளை அவிழ்த்து விடக்கூடாது என எச்சரித்து அவர்களை போலீஸார் அனுமதித்தனர்.

வாடிவாசல் கோயிலில் பொங்கல் வைத்து பூஜை நடைபெற்றது. திடீரென்று மாடு வளர்ப்போரும், இளைஞர்களும் அடுத்தடுத்து 6 காளைகளை ஜல்லிக்கட்டு களத்தில் அவிழ்த்துவிட்டனர். அந்த மாடுகள், கூடி நின்ற கூட்டத்தை நோக்கி சீறிப் பாய்ந்தன. அந்த காளைகளை மாடுபிடி வீரர்களும், இளைஞர்களும் போட்டிப்போட்டுக் கொண்டு அடக்க முயன்றனர். மாடுகள் நாலாபுறமும் சிதறி ஓடின. இதனால், பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.

போலீஸார் தடியடி

அங்கிருந்த மதுரை மாவட்ட எஸ்பி விஜயேந்திர பிதாரி தலைமையிலான போலீஸார், கூட்டத்தினரையும், மாடுபிடி வீரர்களையும் தடியடி நடத்தி கலைத்தனர். பலர் கீழே விழுந்து படுகாயமடைந்தனர். அந்த இடமே போர்க்களம் போன்று காணப்பட்டது. இதையடுத்து அப்பகுதி முழுவதும் ஆட்களின்றி வெறிச்சோடியது.

பின்னர், சில நிமிடங்களில் மீண்டும் மாடுபிடி வீரர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், வாடிவாசல் அருகே திரண்டு பீட்டா அமைப்பு மற்றும் போலீஸாருக்கு எதிராக முழக்கமிட்டனர். அவர்களுக்கு ஆதரவாக இளைஞர்கள், அங்கு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் சமாதானம் செய்தனர். இதனால், பாலமேட்டில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “காளைகளை அவிழ்த்து விட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கப்படும். நடந்தது ஜல்லிக்கட்டு அல்ல. பூஜைக்கு மாடுகளை அழைத்து வந்தவர்கள், அதை அவிழ்த்து விட்டுள்ளனர். இது வழக்கமாக நடக்கும் நிகழ்வுதான்” என்றனர்.

SCROLL FOR NEXT