வங்கக் கடலில் உருவான ‘அஷோபா’ புயல் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது. இது சென்னைக்கு வட கிழக்கே 730 கி.மீ. தூரத்திலும், விசாகப்பட்டினத்துக்கு தென் கிழக்கே 560 கி.மீ. தூரத்திலும் நிலை கொண்டுள்ளது.
இதனால், வட தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலத்தில் சனிக்கிழமை ஒரு சில இடங்களிலும், ஞாயிற்றுக்கிழமை அநேக இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புண்டு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், அடுத்த 2 நாட்களுக்கு வட தமிழக கரையோரத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வட தமிழகம் மற்றும் ஆந்திர கரையோரத்தில் 30 முதல் 50 கி.மீ. வேகம் வரை காற்று வீசக்கூடும். கடல் சீற்றத்துடன் காணப்படும். ஏற்கெனவே கடலுக்கு சென்றவர்கள் சீக்கிரம் கரைக்கு திரும்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரை பதிவான மழை நிலவரப்படி, தமிழகத்தில் எங்கும் மழை பெய்யவில்லை. ஆனால், அடுத்த 2 நாட்களில் கடலோர பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.