வழக்கறிஞர்கள் போராட்டத்தை தீர்வுக்கு கொண்டு வர தமிழக அரசு உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''வழக்கறிஞர்களின் வழக்காடும் உரிமையைப் பறிக்கும் வகையில் சென்னை உயர் நீதிமன்றம் வழக்கறிஞர் சட்டத்தை திருத்தியுள்ளது. இதனை எதிர்த்து தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நீதிபதிகள் மற்றும் நீதித்துறை நடுவர்கள் தங்கள் விருப்பு, வெறுப்பு சார்ந்து வழக்கறிஞர்களை பணிய வைக்கவும், பழிவாங்கவும் பயன்படுத்தும் கொடிய ஆயுதமாக சட்டத்திருத்தம் அமைந்திருப்பதால் வழக்கறிஞர் சமூகத்தில் கடுமையான கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
சார்பற்ற, நடுநிலையோடு நீதிபரிபாலனம் அமைந்திட வழக்கறிஞர்களின் சட்ட சேவை அவசியத் தேவை என்பதைக் கருத்தில் கொண்டு ஆக்கபூர்வமாக அணுக வேண்டிய பார் கவுன்சில் ஆப் இந்தியா மூத்த வழக்கறிஞர்கள் பி.திருமலைராஜன், எம்.ஆர்.ஆர்.சிவசுப்பிரமணியன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோரை இடைநீக்கம் செய்து எரியும் நெருப்புக்கு எண்ணெய் வார்த்துள்ளது.
இன்று முற்றுகைப் போராட்டமாக வடிவெடுத்துள்ள வழக்கறிஞர்களின் போராட்டம் பிற பகுதிக்கும் பரவி படர்வதற்கு முன்னர் உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் பிரச்சினையில் தலையிட்டு சுமூகத் தீர்வு காண வேண்டும்.
வழக்கறிஞர்களின் போராட்டம் பற்றி வாய்திறக்காமல் மௌனம் காத்துவரும் தமிழக அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு வழக்கறிஞர்கள் போராட்டத்தை தீர்வுக்கு கொண்டுவரவும் உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்'' என்று முத்தரசன் கூறியுள்ளார்.