தமிழகம்

அவைக் குறிப்பிலிருந்து ஸ்டாலின் பேச்சு நீக்கப்பட்டதைக் கண்டித்து சட்டப்பேரவையிலிருந்து திமுக வெளிநடப்பு

செய்திப்பிரிவு

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டா லின் பேசியது நீக்கப்பட்டதைக் கண்டித்து சட்டப்பேரவையிலிருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் ஸ்டாலின் எழுந்து, ‘‘ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் நேற்று (ஜன. 31) நான் பேசும்போது அதிமுக அரசு செயல்படாமல் இருப்பதை விமர்சிக்கும் வகையில் ஒரு வார்த்தையை பயன்படுத்தினேன். அது பயன்படுத்தக் கூடாத வார்த்தை அல்ல. கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் என்னைப் பார்த்து கூறிய கடுமையான வார்த்தையை நீக்கிய பேரவைத் தலைவர் நான் பேசியதையும் நீக்கியிருக்கிறார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ‘திமுக அரசு தமிழகத்தை அதல பாதாளத்துக்கு அழிவுப் பாதையில் அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது’ என்றெல்லாம் பேசியிருக்கிறார். அமைச்சர் பேசியது அவைக் குறிப்பில் இருப்பதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அதே சமயத்தில் நான் பேசியதையும் அவைக் குறிப்பில் இடம் பெறச் செய்ய வேண்டும்’’ என்றார்.

அவருக்கு பதிலளித்த பேரவைத் தலைவர், ‘‘இந்தப் பிரச்சினை குறித்த முடிவை நேற்றே நான் அறிவித்துவிட்டேன். ஸ்டாலின் பயன்படுத்திய வார்த்தைக்கான பொருளை நான் சென்னைப் பல்கலைக்கழக அகராதியில் பார்த்தேன். அரசு என்பது மாறக் கூடியது. ஆனால், அதிகாரிகளைக் கொண்ட நிர்வாகம் நிரந்தரமானது. எனவே, நிர்வாகத்தை கடுமையாக விமர்சிக்கும் அந்த வார்த்தையை அவைக் குறிப்பிலிருந்து நீக்கியது சரியான முடிவுதான்’’ என்றார்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் கோஷமிட்ட னர். அப்போது குறுக்கிட்ட முதல் வர் ஓ.பன்னீர்செல்வம், ‘‘முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திமுக அரசைத்தான் விமர்சித்தார். அரசு நிர்வாகத்தை கடுமையான வார்த்தைகளால் விமர்சிக்க வில்லை. எனவே, ஸ்டாலின் பேசிய வார்த்தை நீக்கப்பட்டது சரியானதே’’ என்றார்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டாலின் தலைமையில் திமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ‘‘முன்னாள் முதல் வர் எம்.ஜி.ஆர். இதே அவையில் ‘ஆட்சியல்ல, நிர்வாகமல்ல, சட்டப்பேரவையே செத்துவிட்டது’ என பேசியிருப்பது அவைக் குறிப்பில் பதிவாகியுள்ளது. அதனை ஒப்பிடும்போது நான் பேசியது சாதாரண வார்த்தைதான். ஆனால், அதைக்கூட பேரவைத் தலைவர் அனுமதிக்கவில்லை. அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலேயே நாங்கள் வெளி நடப்பு செய்தோம்’’ என்றார்.

பின்னர் சில நிமிடங்களில் இருக்கைக்கு திரும்பிய திமுக எம்எல்ஏக்கள் பேரவை நடவடிக்கை களில் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT