தமிழக முதல்வர் ஜெயலலிதா நலம்பெற்று திரும்பும் வரை ஆட்சி நிர்வாகத்தை கவனிக்க வெளிப்படையான இடைக்கால ஏற்பாடு தேவை என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக முதல்வர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள போது நான் முதல் ஆளாக அப்பல்லோ சென்றேன். இதையடுத்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரும் அப்பல்லோ சென்று முதல்வரின் உடல் நிலை குறித்து கேட்டறிந்தனர்.
முதல்வரின் நிலை குறித்து அறிய பிரதமராகவுள்ள மோடி இதுவரை சென்னை வரவில்லை. அது அவரது தனிப்பட்ட விருப்பம். ஆனால், முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளது கண்டிக்கத்தக்கது. இது மத்திய அரசின் மீது பல்வேறு சந்தேகங்களை கிளப்புகிறது.
ஏற்கெனவே, அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வருக்கு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள எய்ம்ஸ் மருத்துவர் குழுவை மத்திய அரசு அனுப்பியது. அப்பல்லோ நிர்வாகம் கேட்காமலேயே இந்தப்பணியை மத்திய அரசு செய்துள்ளது. இதுவும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் உள்நோக்கம் கொண்ட இத்தகைய பணிகள் மிகவும் கண்டிக்கத்தக்கது.
முதல்வர் நலம்பெற்று திரும்பும் வரை அரசு நிர்வாகத்தை தேக்கமின்றி நடத்திச் செல்ல வெளிப்படையான இடைக்கால ஏற்பாடு தேவை. அப்படி செய்யாததால்தான் மத்திய பாஜக அரசு இங்கே குழப்பம் விளைவிக்க முற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
முதல்வருக்குப் பதிலாக தலைமைச் செயலாளரோ, உள்துறை செயலாளரோ ஆட்சியை நடத்துவது சரியல்ல, அரசியல் சட்டத்துக்கு அப்பாற்பட்ட ஒரு குழு நிர்வாகத்தை நடத்தக்கூடாது” என மூத்த பத்திரிகையாளர் திரு என்.ராம் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, ஆட்சி நிர்வாகத்தை நடத்திச்செல்ல வெளிப்படையான இடைக்கால ஏற்பாடு ஒன்று செய்ய வேண்டும். அந்த ஆட்சி, அதிகாரிகளின் ஆட்சியாக இல்லாமல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் ஆட்சியாக இருக்க வேண்டும்'' என்று திருமாவளவன் கூறியுள்ளார்.