தமிழகம்

நந்தனம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் 2-வது மாடி பால்கனி இடிந்து விழுந்ததில் பெண் உயிரிழப்பு: கணவர், மகன் படுகாயம்

செய்திப்பிரிவு

நந்தனத்தில் உள்ள வீட்டுவசதி வாரியக் குடியிருப்பின் 2-வது மாடி பால்கனி இடிந்து விழுந்ததில் பெண் உயிரிழந்தார். அவரது கணவர், மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சென்னை நந்தனத்தில் உள்ள லோட்டஸ் காலனி தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் வசிப்பவர் மாரிமுத்து (60). தலைமைச் செயலகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி கிருஷ்ணம்மாள் (55), மகன் ஹரிகிருஷ்ணன் (26).

இவர்கள் 3 பேரும் நேற்று மதியம் 1.15 மணி அளவில் 2-வது மாடியில் உள்ள பால்கனியில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது பால்கனி திடீரென இடிந்து விழுந்தது. இதில் 3 பேரும் 2-வது மாடியில் இருந்து கீழே விழுந்தனர். இடிபாடுகளில் சிக்கி மூவரும் படுகாயம் அடைந்தனர்.

தீவிர சிகிச்சை

தகவல் கிடைத்து விரைந்து வந்த சைதாப்பேட்டை போலீ ஸார், அவர்கள் 3 பேரையும் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கிருஷ்ணம்மாள் உயிரிழந்தார். மாரிமுத்து, ஹரிகிருஷ்ணனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பராமரிப்பு இல்லாத கட்டிடம்

விபத்து நடந்த வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு 1970-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டுள்ளது. முறையான பராமரிப்பு இல்லாத அக்கட்டிடம், தற்போது பெய்த மழையில் வலுவிழந்து இடிந்து விழுந்ததாக அப்பகுதியினர் கூறினர்.

          
SCROLL FOR NEXT