திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நீட் தேர்வில் தமிழகத்தில் 38 சதவீத மாணவர்கள்தான் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு மருத்துவக் கல்விக்கான மாணவர் சேர்க்கையில் பொதுப் பிரிவினருக்கான 50.5 சதவீத இடங்களுக்கான கலந்தாய்வு தனியாக நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் இட ஒதுக்கீடே இல்லாத பொதுப் பிரிவினருக்கு அதாவது உயர் ஜாதியினருக்கு 50.5 சதவீத இடங்களையும் ஒட்டுமொத்தமாக அள்ளிக் கொடுக்க திட்டமிட்டுள்ளனர். இந்த அப்பட்டமான மோசடியை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
இட ஒதுக்கீட்டு உரிமையைப் பாதுகாக்க வரும் ஜூலை 4-ம் தேதி காலை 10.30 மணிக்கு சென்னை வேப்பேரி பெரியார் திடலில் தோழமை கட்சித் தலைவர்கள், கல்வியாளர்கள், சமூக நீதியாளர்களின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெறும் என்றார்.