தமிழகம்

பாமாயில் இறக்குமதி விலையை அதிகரிக்க வேண்டும்: மத்திய அமைச்சரிடம் வானதி சீனிவாசன் மனு

செய்திப்பிரிவு

தென்னை விவசாயிகளைக் காப்பாற்ற பாமாயில் இறக்குமதி விலையை அதிகரிக்க வேண்டும் என பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

வானதி சீனிவாசன் தலைமை யிலான பாஜக குழுவினர் மத்திய தொழில், வர்த்தகத் துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தனர். தேங்காய் விலை சரிவு காரணமாக தென்னை விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, தென்னை விவசாயி களைக் காப்பாற்ற பாமாயில் இறக்குமதி விலையை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.

பின்னர் அவர்கள் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜூவை சந்தித்து, கோவையில் இருந்து துபாய்க்கு நேரடி விமான சேவை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பாக வானதி சீனிவாசனிடம் கேட்டபோது, ‘‘தவறான புரிதல் காரணமாக தேங்காய் எண்ணெய் ஏற்றுமதி சரிந்துள்ளது. இந்தியாவிலும் தேங்காய் எண்ணெய் பயன்பாடு குறைந்துள்ளது. இதனால் தேங்காய் விலை சரிந்து விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்னை விவசாயிகளுக்கு உதவும் வகையில் பாமாயில் இறக்குமதி விலையை அதிகரிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை விடுத்தோம். இது பற்றி பிரதமரிடம் பேசி ஆவன செய்வதாக அவர் உறுதியளித்துள்ளார். தொழில் துறையினர் நிறைந்த பகுதி என்பதால் கோவையில் இருந்து துபாய்க்கு நேரடி விமான சேவை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். அதனை பரிசீலித்து முடிவு எடுப்பதாக அமைச்சர் கஜபதி ராஜூ உறுதி அளித்துள்ளார்’’ என்றார்.

SCROLL FOR NEXT