தமிழகம்

தமிழக அமைச்சரவையின் எதிர்காலம் பி.தனபால் கையில்..

செய்திப்பிரிவு

தமிழக அமைச்சரவையின் எதிர் காலம் இன்று பேரவைத் தலைவர் பி.தனபால் கையில் உள்ளது.

தமிழக அமைச்சரவையின் பெரும்பான்மையை நிரூபிப்பதற் கான தீர்மானம் இன்று சட்டப் பேரவையில் முன்மொழியப் படுகிறது. சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பதற் கான வாக்கெடுப்பை பேரவைத் தலைவர் பி.தனபால் நடத்துகிறார். கடந்த 2011-16 அதிமுக ஆட்சியின் தொடக்கத்தில், பேரவைத் துணைத் தலைவராக இவர் நியமிக்கப்பட் டார். பின்னர் பேரவைத் தலைவராக இருந்த டி.ஜெயக்குமார் பதவி விலகியதைத் தொடர்ந்து, பி.தனபால் பேரவைத் தலைவராக நியமிக்கப்பட்டார். அதன்பின் 2016-ல் மீண்டும் பேரவைத் தலைவரானார்.

சேலம் மாவட்டம், கருப்பூரில் 1951-ம் ஆண்டு மே 16-ம் தேதி பிறந்த பி.தனபால், எம்.ஏ.படித்துள்ளார். விவசாய குடும்பத்தில் பிறந்த இவர், அதிமுகவை எம்.ஜி.ஆர் தொடங்கிய காலம் முதல் அக்கட்சியில் இருந்து வருகிறார். 1977, 80, 84-ம் ஆண்டுகளில் சங்ககிரி தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார். எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு அதிமுக பிரிந்தபோது ஜெயலலிதா அணியில் இருந்தார். அதன்பின் 2001-ல் சங்ககிரி தொகுதியிலேயே போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2001-02 வரை ஜெயலலிதாவின் அமைச்சரவையில் உணவுத்துறை அமைச்சராக இருந்தார். அதன்பின் 2011-ம் ஆண்டு ராசிபுரம் தொகுதி யிலும், 2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அவினாசியிலும் போட்டி யிட்டு வெற்றி பெற்றுள்ளார். 1955-ம் ஆண்டுக்குப் பிறகு தமிழக சட்டப் பேரவையில் பொறுப்பேற்ற முதல் தலித் பேரவைத் தலைவர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1988-ம் ஆண்டு சட்டப் பேரவையில், அப்போது முதல்வ ராக இருந்த ஜானகி ராமச்சந்தி ரனின் அமைச்சரவை பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அன்று பேரவைத் தலைவராக பி.எச்.பாண்டியன் இருந்தார். வாக்கெடுப்பில் ஜானகி ராமச்சந்திரனின் அரசு கவிழ்ந்தது. அப்போது ஜெயலலிதாவுக்கு ஆதரவாக செயல்பட்ட 33 எம்எல்ஏக்களை பேரவைத் தலைவர் தகுதி நீக்கம் செய்தார். தற்போதைய பேரவைத் தலைவர் பி.தனபாலும் அவர்களில் ஒருவர்.

அதே சூழல் தற்போது தனபால் பேரவைத் தலைவராக உள்ளபோது ஏற்பட்டுள்ளது. பேரவைத் தலைவர் தனபால்தான் முதல்வர் கொண்டுவரும் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். எந்த முறையில் வாக்கெடுப்பு நடத்துவது என்பதையும் அவரே முடிவு செய்வார்.

இக்கட்டான சூழல், அதாவது ஆதரவும், எதிர்ப்பும் ஒரே அளவில் இருந்தால், பேரவைத்தலைவர் விரும்பும் தரப்புக்கு வாக்களிக்கலாம். எனவே பேரவைத் தலைவர் பி.தனபாலின் கையில் அமைச்சரவையின் எதிர்காலம் உள்ளது.

SCROLL FOR NEXT