தமிழகம்

மக்களின் கருத்தை அறிந்த பிறகு நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது பற்றி முடிவு: மத்திய அமைச்சர் தகவல்

செய்திப்பிரிவு

மக்களின் கருத்தை அறிந்த பிறகு நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது பற்றி முடிவு எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (நீட்) இருந்து தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு விலக்கு பெறும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் கடந்த ஜனவரி 31-ம் தேதி நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதா குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும்படி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பிரதமரிடமும், குடியரசு தலைவரிடமும் வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழக முதல்வர், டெல்லியில் பிரதமரை சந்தித்து நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரும் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினார். நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெறும் சட்ட மசோதாவுக்கு குடியரசு தலைவரின் ஒப்புதல் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது கடந்த ஜனவரி 31-ம் தேதி தொடங்கி கடந்த 1-ம் தேதியுடன் முடிவடைந் துவிட்டது. மே மாதம் 7-ம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற உள்ளது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவை நம்பி அரசு பள்ளிகளில் பிளஸ் 2 படித்துவரும் ஏழை மாணவர்கள் பெரும்பாலானோர் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்காமல் உள்ளனர். சிபிஎஸ்இ மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மட்டுமே நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து இருப்பதாகவும், அவர்கள் பயிற்சி மையங்களில் சேர்ந்து நீட் தேர்வுக்கு படித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

நீட் தேர்வு நடைபெறுமா அல்லது பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு மூலம் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடக்குமா என்ற பெரும்குழப்பத்தில் மாணவர் களும், அவர்களின் பெற்றோரும் உள்ளனர்.

முதல்வருடன் சந்திப்பு

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க நேற்று சென்னை வந்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்துக்கு சென்று அவரை சந்தித்தார். சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அமைச்சர்கள் சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன் ஆகியோர் உடன் இருந்தனர். அப்போது நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்குமாறு மத்திய அமைச்சரிடம் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

பின்னர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், “நீட் தேர்வு தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்டபின் முடிவு எடுக்கப்படும்” என்றார்.

SCROLL FOR NEXT