கோவை மதுக்கரையில் சுற்றித்திரியும் மூன்று காட்டு யானைகளைக் கட்டுப்படுத்தி, அதில் ‘மிஷன் மகராஜ்’ ஒற்றை யானையை பிடிப்பதற்காக, டாப்சிலிப் முகாமைச் சேர்ந்த கலீம் உள்ளிட்ட 4 கும்கி யானைகள் குழுவாக இணைகின்றன.
கோவை மதுக்கரை சுற்று வட்டாரப் பகுதியில் கடந்த ஒன்றரை வருடத்துக்கு மேலாக சுமார் 18 வயதுடைய ஒற்றை ஆண் யானை சுற்றி வருகிறது. துருதுருவென சுற்றித்திரியும் இந்த யானை, அடிக்கடி விவசாய பரப்புகளில் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு வனத்துறை ஊழியர் ஒருவர் இந்த யானை தாக்கி இறந்தார். தொடர்ந்து சேதங்கள் ஏற்பட்டு வந்ததையடுத்து, ஒற்றை யானையைப் பிடித்து டாப்சிலிப் முகாமுக்கு கொண்டு செல்ல, தமிழக வனத்துறை உத்தரவிட்டுள்ளது.
‘மதுக்கரை மிஷன் மகராஜ்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தில் 4 கும்கி யானைகள், 50-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் இணைக்கப் பட்டுள்ளனர். முதற்கட்டமாக முதுமலையிலிருந்து விஜய், சாடிவயலில் இருந்து பாரி, சுஜய் ஆகிய கும்கி யானைகள், நவக்கரை வனத்துறை முகாமுக்கு அழைத்து வரப் பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து வனத்துறையினர் தனித்தனி குழு அமைத்து, மதுக்கரை சுற்றுவட்டாரப் பகுதியில் ஒற்றை யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். மயக்க ஊசி செலுத்து அந்த யானையை பிடிப்பதற்காக காலநிலை, வழக்கமான வழித்தடம், தங்குமிடம் ஆகியவற்றையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, மதுக்கரை ராணுவ முகாம் அருகே, மேலும் இரண்டு காட்டு யானைகளுடன் ‘மிஷன் மகராஜ்’ ஒற்றை யானை கூட்டு சேர்ந்தது. அதைத் தொடர்ந்து இரண்டு நாட்களாக 3 யானைகளும் ஒன்றாகவே சுற்றி வருகின்றன. இதனால் ஒற்றை யானையை மட்டும் வனத்துறையினர் பிடிப்பார்களா? அல்லது 3 யானைகளையும் பிடிக்க வேண்டிய சூழல் ஏற்படுமா என்ற கேள்வி பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் மதுக்கரை ராணுவ முகாம் அருகே சாலையைக் கடந்து வனத்துக்குள் சென்ற 3 யானைகளும் நேற்று அதிகாலை வெளியே வந்தன. சில மணி நேரம் கழித்து மீண்டும் அந்த யானைகள் சாலையின் மையத் தடுப்பைக் கடந்து, அங்குள்ள மலைப்பகுதிக்குள் சென்றன. இதையடுத்து அங்கு வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். வனத்துறையினர் கூறும்போது, ‘3 யானைகளும் ஒன்றாகவே சுற்றி வருகின்றன. அதேசமயம் மதுக்கரை வனத்தில் யானைக் கூட்டம் ஒன்றும் இடப்பெயர்வுக்காக தங்கியுள்ளதாகத் தெரிகிறது. எனவே அவற்றின் நகர்வுகளைக் கண்காணித்து அதன் பிறகே ஒற்றை யானையை பிடிக்கும் நடவடிக்கை தொடங்கும்’ என்றனர்.
நவக்கரை முகாம்
நவக்கரை முகாமில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ள 3 கும்கி யானைகளுடன், டாப்சிலிப் அருகே உள்ள கோழிகமுத்தி முகாமைச் சேர்ந்த கலீம் (49) என்ற கும்கி யானை இணைகிறது.
பொள்ளாச்சி கோட்ட வன அலுவலர் வ.சுப்பையா கூறும்போது, ‘கும்கி யானை கலீமை, ‘மிஷன் மதுக்கரை மகராஜ்’ திட்டத்துக்கு அழைத்துச் செல்ல உத்தரவு கிடைத்துள்ளது. இதையடுத்து, இன்று (ஜூன் 16) கோவைக்கு யானை அழைத்துச் செல்லப்படுகிறது. அதற்காக அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன’ என்றார்.
3 காட்டு யானைகளை கட்டுப்படுத்தத் தயாராகும், கும்கி யானைகள் குழுவில், கோழிகமுத்தி முகாமைச் சேர்ந்த கலீம் வயதில் மூத்த யானையாகும். திருவண்ணாமலை, ஓசூர் ஆகிய பகுதிகளில் காட்டு யானைகளைப் பிடித்த அனுபவம் கலீம் யானைக்கு ஏற்கெனவே உள்ளது. கோவை நகரத்துக்குள் கலீம் வருவது இதுவே முதன்முறை எனக் கூறப்படுகிறது. இந்த யானையே ‘மிஷன் மதுக்கரை மகராஜ்’ திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும். பிடிபடும் ஒற்றை யானையை, தன்னுடனேயே முகாமுக்கே (கோழிகமுத்தி) கலீம் அழைத்துச் செல்லும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.