தமிழகம்

காட்டின் தூய்மைக் காவலனை காப்பாற்றுங்கள்: இயற்கை ஆர்வலர்கள் வேண்டுகோள்

ஜி.ஞானவேல் முருகன்

இயற்கை சூழலியல் தொகுதியில் பிணந்தின்னிக் (Vulture) கழுகுகள் ஆற்றும் சேவை முக்கியமானது.

வானத்தில் வட்டமிட்டபடி இரை தேடும் இந்த கழுகுக் கூட்டம் காடுகளில் இறந்த விலங்குகளின் உடல் கிடந்தால் அதனை தன் கூரிய அலகால் கொத்தித் தின்றுவிடும். பிற விலங்குகள் வேட்டையாடி உண்டபின் எஞ்சிய உடல் பாகங்கள் அழுகிய நிலையில் இருந்தாலும் இக்கழுகுகள் உண்ணும்.

கடும் நோய்த் தாக்குதலில் இறந்த உடல்களையும் உண்டு செரிக்கும் தன்மை கொண்டது இது என்பதால், பிணந்தின்னிக் கழுகுகளை காட்டின் தூய்மைக் காவலன் என்று இயற்கை ஆர்வலர்கள் வர்ணிக்கின்றனர்.

உலகம் முழுவதும் 23 வகை பிணந்தின்னிக் கழுகுகள் வாழ்ந்தாலும், இந்தியாவில் 6 வகைகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. சுற்றுச்சூழல் தூய்மைக்குப் பெரிதும் துணை புரியும் இக்கழுகுகளின் எண்ணிக்கை 1990-ம் ஆண்டு வாக்கில் இந்தியாவில் மட்டும் 4 கோடியாக இருந்துள்ளது. இது, 2007 கணக்கெடுப்பின்படி ஒரு லட்சமாகக் குறைந்து, தற்போது சில ஆயிரம் மட்டுமே உள்ளன.

இவ்வித பறவையினங்கள் கூடுகட்டி வாழும் மலைமுகடுகள், மரங்கள் பெருமளவில் அழிக்கப்பட்டதும், வாழ்விடங்கள் சூறையாடப்பட்டதுமே இதற்குக் காரணம்.

அரிதாகிவரும் இவற்றைப் பாதுகாத்து, எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் நோக்கில் ஆண்டுதோறும் செப்டம்பர் 3-ம் தேதி சர்வதேச பிணந்தின்னிக் கழுகுகள் விழிப்புணர்வு நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது.

இதுகுறித்து தமிழக இயற்கை பாதுகாப்புச் சங்கத் தலைவர் வ.சுந்தரராஜூ கூறியது:

பிணந்தின்னிக் கழுகு என்று சொல்லும்போதே நம் மக்களிடம் ஒருவித வெறுப்புணர்வு வருவது இயல்பு. ஆனால், மனித குலத்துக்கு மிகவும் நன்மையைச் செய்யும் பறவையினம் இது. காட்டை ஒட்டி மனிதர்கள் வாழும் பகுதியில், கழிவுகள் கொட்டப்பட்டிருக்கும் இடங்களில் உணவுக்காக பிணந்தின்னிக் கழுகுகள் பறப்பது வழக்கம்.

சில உயிர்க்கொல்லி மருந்துகளின் பயன்பாட்டாலேயே பிணந்தின்னிக் கழுகுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஒவ்வொரு உயிரும் ஒன்றை ஒன்று சார்ந்து வாழும் இந்த உலகில், இயற்கையாக அனைத்து உயிரினமும் வாழும் வகையில் உயிர்க்கொல்லி மருந்துகளை முற்றிலும் தடை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அமைதி கோபுரம், ஆகாய ஈமக்கிரியை

முன்பெல்லாம் பார்சி இனமக்கள் இறந்தவரின் உடலை அமைதி கோபுரத்தின் உச்சியில் வைத்து விடுவார்கள் அங்கு காத்திருக்கும் பிணந்தின்னிக் கழுகுக் கூட்டம் அந்த உடலைத் தின்று இறந்தவரின் ஆத்மாவுக்கு விடுதலை கொடுக்கிறது என நம்பினார்கள். காலமாற்றத்தாலும் கழுகுகளின் எண்ணிக்கை குறைந்ததாலும் இம்முறை தற்போது நடைமுறையில் இல்லை. இதேபோல, திபெத்தில் குறிப்பிட்ட பிரிவினர் இறந்தவர் உடலை பிணந்தின்னிக் கழுகுகளுக்கு இரையாக மலை உச்சியில் திறந்தவெளியில் வைத்து விடுவது தற்போதும் வழக்கத்தில் உள்ளது. இதை ஆகாய ஈமக்கிரியை என்கின்றனர்.

SCROLL FOR NEXT